உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகம் வழங்காமல் அலட்சியம்

காரைக்காலில் புத்தகம் கேட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் துவங்கி இயங்கி வருகிறது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் இதுவரை புத்தகங்கள் வழங்கவில்லை. தற்போது சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டதால் புத்தகங்கள் வழங்கும் பணி நடந்தது வருகிறது. காரைக்காலில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களின் பழைய புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். அதிலும் பலருக்கு பழைய புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால் கல்வி பயில முடியாமல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு உடனே புத்தகங்களை வழங்க வேண்டும் என காரைக்கால் கோவில்பத்து தந்தை பெரியார் பள்ளி மாணவர்கள் நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சப்-கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்தார். சப்-கலெக்டர் அசோக்குமாரை சந்தித்த பிளஸ் 2 மாணவர்கள், அடுத்த வாரம் காலாண்டு தேர்வு நடக்கவுள்ளது. ஆனால் எங்களிடம் புத்தகங்கள் இல்லை. தேர்வுகளை எப்படி எழுதுவது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பது. கடந்த 3 மாதங்களாக புத்தகங்கள் இன்றி வகுப்பறையில் வெறும் கையுடன் அமர்ந்துள்ளோம். எங்களுக்குப் புத்தகம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என தெரிவித்தனர். சப்-கலெக்டர் அசோக்குமார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்ரமணியத்திடம் விசாரித்தபோது, லாரி வேலை நிறுத்தத்தால் புத்தகங்களைக் கொண்டு வரமுடியவில்லை என்றார். கல்வி அதிகாரியின் பதிலை கேட்டு கோபமடைந்த சப்- கலெக்டர், 2 தினங்களுக்குள் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்