ஆசியாவிலேயே 2வது பெரிய நூலகம் சென்னையில் அமைகிறது
நூறு கோடி ரூபாய் செலவில் சகல வசதிகளுடன் அமையும் இந்த நூலகம், ஆசிய கண்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையையும், தெற்காசிய நாடுகளில் முதல் நூலகம் என்ற பெருமையையும் பெற உள்ளது. தமிழகத்தில் தற்போது மாநில மைய நூலகமாக கன்னிமாரா பொது நூலகம், 30 மாவட்ட மைய நூலகங்கள், ஆயிரத்து 567 கிளை நூலகங்கள், ஆயிரத்து 492 கிராமப்புற நூலகங்கள், 653 பகுதிநேர நூலகங்கள், 12 நடமாடும் நூலகங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 755 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ‘100 கோடி ரூபாய் செலவில் சர்வதேசத் தரத்தில் சென்னையில் மாநில நூலகம் அமைக்கப்படும்’ என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நூலகம் கட்டுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வந்தன. சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் பக்கத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்த இடத்தில் தான், இந்த மாநில நூலகம் அமைக்கப்படுகிறது. எட்டு ஏக்கர் பரப்பளவில் எட்டு அடுக்குகளாக நூலகம் அமைகிறது. சர்வதேசத் தரத்தில் நவீன வசதிகளுடன் அமைய உள்ள நூலகக் கட்டுமானப் பணிகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 75 சதவீத தொகையை நூலகத் துறையும், 25 சதவீத தொகையை தமிழக அரசும் வழங்குகிறது. மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைகிறது. ஒவ்வொரு தளமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஐ.டி., பார்க் போல் அமையும் கட்டடத்தின் முன்பகுதியில் விசாலமான பச்சைப் பசேல் புல்வெளி அமைக்கப்படுகிறது. திறந்தவெளியில் 500 கார்களை நிறுத்தும் அளவிற்கு வசதி, புட் கோர்ட், 2 ஆயிரத்து 500 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான ஆடிட்டோரியம், வார, தினசரி பத்திரிகைகளுக்குத் தனித்தனி அறைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தனித் தனி பிரிவுகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு தனிப்பிரிவு, அனைத்து தளங்களிலும் இன்டர் நெட் வசதி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 10 லட்சம் புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெறும். தற்போது அதிகபட்சமாக கன்னிமாரா பொது நூலகத்தில் ஆறு லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. நூலகத்தைப் பராமரிக்கும் பணிக்காக அலுவலர்கள் கடைநிலை ஊழியர்கள் வரை 300 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.