உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் எப்போது?

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடும் தேதி குறித்து, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க வில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு இல்லாமல் மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இதன்படி, மாவட்ட வாரியாக மாணவர்களுக்கான மதிப்பெண் நிர்ணய பணிகள் முடிந்து உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், முந்தைய தேர்வு அடிப்படையிலான மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, அரசு தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து, மதிப்பெண் வழங்குவதற்கான முறைகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை, அரசாணை வெளியிட்டது.முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில், மதிப்பெண்களை எப்படி கணக்கிடுவது என்ற விபரம் இடம் பெற்றுள்ளது. இந்த அரசாணை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதே நேரம், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடும் தேதி குறித்து, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இம்மாதம், 31க்குள் மதிப்பெண் பட்டியலை வெளியிட, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஜூலை 26, 27க்குள் மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்