இ-20 பெட்ரோலால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; ஐ.ஐ.டி., ஆய்வில் நிரூபணம்
புதுடில்லி: இ-20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை கான்பூர் ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பது ஆகிய நோக்கங்களை மையப்படுத்தி நாடு முழுவதும் இ-20 பெட்ரோல், அதாவது 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.அதே நேரத்தில் இ-20 பெட்ரால் செயல்திறன் குறித்து சமூக வலைதளங்களில் ஆதாரம் இல்லாத புகார்கள் எழுந்தன.அவற்றை நிராகரித்த மத்திய அரசு, பல ஆண்டு கால அறிவியல் சோதனைகள், ஆலோசனைளுக்கு பிறகே எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.இந்நிலையில், இ-20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்று கான்பூர் ஐ.ஐ.டி., நிர்வாகம் கண்டறிந்து உள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி.,யின் இயந்திர பொறியியல் துறையில் உள்ள இன்ஜின் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானி துருவ் ராஜ் கரானா தலைமையிலான குழுவினர் இது பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.அதன் முடிவில் இ-20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து விஞ்ஞானி துருவ் ராஜ் கரானா கூறி உள்ளதாவது:எங்களின் ஐ.ஐ.டி., நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இ-20 பெட்ரோலை பயன்படுத்தும் போது, எரிபொருளின் செயல்திறன் குறைவானது 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த 5 சதவீதம் என்பது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்பட்டு இருக்கலாம்.வாகனம் இயக்கும் முறை, சாலையின் நிலை, டயர் காற்று அழுத்தம், போக்குவரத்து நெரிசல், வாகன பராமரிப்பு என பல காரணங்களாலும் மைலேஜ் குறைகிறது. எரிபொருள் மட்டும் தான் காரணம் என்று கூறிவிட முடியாது.தூய்மையான பெட்ரோலை கொண்டு அடுத்தடுத்து ஆய்வுகளை தொடர்ந்து செய்தாலும் இதே முடிவுகளை பெற முடியும். விரிவான பல கட்ட சோதனைகளில் இ-20 பெட்ரோலானது எந்த வகையிலும் இன்ஜின் சேதம் ஏற்படுத்தாது, தேய்மானம் ஏற்படுத்தாது என்பதை கண்டறிந்தோம்.இ-20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களில் பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கூற்றுகள் அறிவியல் ரீதியாக ஆதாரமற்றவை. இணையத்தில் காணப்படும் சரிபார்க்கப்படாத பதிவுகளை வாகன ஓட்டிகள் நம்பாமல், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை நம்ப வேண்டும்.எங்களின் ஆராய்ச்சி மையத்தில் உள்ள இயந்திர ஆராய்ச்சி ஆய்வக பேராசிரியர் அவினாஷ்குமார் அகர்வால் தலைமையிலான குழுவினர், எத்தனால் கலந்த எரிபொருட்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த குழுவினர் 85 சதவீதம் எத்தனால் அடங்கிய எரிபொருளையும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர். இ-20 எரிபொருளை பயன்படுத்துவதால் வாகன செயல்திறனில் எவ்வித சரிவும் இல்லை என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து உள்ளனர்.இவ்வாறு விஞ்ஞானி துருவ் ராஜ் கரானா கூறி உள்ளார்.