ஜி-20 மாநாட்டின் சிறப்பம்சங்கள், வரலாறு, முக்கியத்துவம் இவை..!
புதுடில்லி: ஜி-20, 2023 மாநாடு இன்று மற்றும் நாளை தலைநகர் டில்லியில் உள்ள பிரகதி மைதான் பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, 15 நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஒரு பூமி, ஒரு எதிர்காலம் என்னும் தலைப்பில் இந்த ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. ஜி-20 மாநாட்டின் வரலாறு, சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்வோம்.ஜி-20 மாநாடு 1999 ஆம் ஆண்டுமுதல் நடத்தப்படுகிறது. அர்ஜன்டினா, ஆஸி., பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்ரிக்கா, துருக்கி, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து இக்குழு உருவாகியது. ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும் இந்த ஜி-20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்வர்.ஜி-20 மாநாடு இந்த 20 நாடுகளிடையே பொருளாதார மேம்பாட்டை உண்டாக்கவும், நட்புறவைப் பேணவும் வழிவகை செய்கிறது. இந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ஜோ பைடன், இம்மானுவேல் மாக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். மாநாடு நிறைவடைந்ததும் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் பிரதமர் கலந்துகொள்வார்.முன்னாள் பாரதப் பிரதமர்களாகிய மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோர் இந்த விருந்தில் கலந்துகொள்ள மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இருவருக்கும் 90 வயது என்பதால் உடல்நலம் கருதி இதில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஜி-20 மாநாடு வெற்றிபெற முன்னாள் பிரதமர் தேவகவுடா டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.