2035க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கான ஆய்வு மையம்!
சின்னாளபட்டி: 2035க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கான ஆய்வு மையம் அமைக்கப்படும் என ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மைய இயக்குனர் ராஜராஜன் பேசினார்.திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மையம் சார்பில் நடந்த உலக விண்வெளி வார விழாவில் அவர் பேசியதாவது:விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை கண்டு வியக்கும் நாம் இந்த பூமி எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். பாரம்பரியத்தை பாதிக்காத தொழில்நுட்ப வளர்ச்சி தேவை. தட்பவெப்ப மாற்றத்தால் பாதிப்படையும் புவியை பக்க விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் வழிகளை கண்டறிய வேண்டும்.சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் மூலம் மண்வளம், நீர் வளம், பயிர் சாகுபடி, மகசூல், மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் முன்னறிவிப்பு உட்பட அனைத்து தகவல்களையும் பெரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பூமியின் வளத்தை பாதுகாத்து வெப்பத்தை குறைக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துள்ளது.பூமிக்கு மாற்றாக சந்திரனிலும் செவ்வாய் கிரகத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான தேடல் தொடங்கியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் இதற்கான சாத்தியங்கள் கண்டறியப்படலாம்.இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சி இன்றைய மாணவ சமுதாயத்திடம் உள்ளது. தொழில்நுட்ப சாதனங்களுக்கு ஆதாரமான ஆற்றல் உற்பத்தியை தட்பவெப்ப சூழல் பாதிக்காத வகையில் மேற்கொள்ள ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.2040ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவுக்கு அனுப்பவும் சுக்கிரன் கிரகம் குறித்த ஆய்வு செய்யவும் இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2035க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கான ஆய்வு மையம் அமைக்கப்படும். துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் 2026 ல் செயல்பாட்டிற்கு வரும்.இவ்வாறு கூறினார். பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார் .பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு மைய பொது மேலாளர் லோகேஷ் முன்னிலை வகித்தனர்.