திருச்சியில் ரூ.290 கோடியில் நுாலகம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திருச்சியில், 290 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, கருணாநிதி நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வழியே நேற்று அடிக்கல் நாட்டினார்.இந்த நுாலகம், 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஏழு தளங்களுடன், 235 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. புத்தகங்கள் மற்றும் இ - புத்தகங்கள், 50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட உள்ளன. அதற்கான தொழில்நுட்ப சாதனங்கள், 5 கோடி ரூபாயில் வாங்கப்பட உள்ளன.கட்டடத்தின் தரைதளத்தில், கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான படிப்பறைகள், காத்திருப்போர் அறை, வி.ஐ.பி., அறைகள் மற்றும் தகவல் அளிக்கும் வசதிகள் இருக்கும்.அடுத்தடுத்த தளங்களில், நிகழ்ச்சி நடத்தும் அறை, வீடியோ கான்பரன்ஸ் அறை போட்டித் தேர்வுகளுக்கான படிப்பறை, பாட வாரியான புத்தகங்கள், குழந்தைகளுக்கான திரையரங்கம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கூடங்கள் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, வேலு, மகேஷ், தலைமை செயலர் முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.