உள்ளூர் செய்திகள்

சென்டாக் நீட் அல்லாத படிப்புகளுக்கு வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு கலை அறிவியல் படிப்பிற்கு 5726 பேர் விண்ணப்பம்

புதுச்சேரி: பி.டெக்., பி.பார்ம்., அக்ரி, கலை அறிவியல் உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளுக்கு வரைவு மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.சென்டாக் நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 3ம் தேதியுடன் நிறைவடைந்தது. நீட் அல்லாத படிப்புகளை பொருத்தவரை சென்டாக்கிற்கு மொத்தம் 12,288 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், புதுச்சேரி மாணவர்கள் 10,540 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ஒதுக்கீட்டிற்கு 1,518, கிராமப்புற ஒதுக்கீடு 776, ஜே.இ.இ., மூலம் 1,810 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.விண்ணப்ப விநியோகம் முடிவுற்ற நிலையில், சென்டாக் நிர்வாகம் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்து, மெரிட் பட்டியல் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து வரைவு மெரிட் லிஸ்ட்டினை சென்டாக் வெளியிட்டுள்ளது.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட கலை அறிவியல் வணிகவியல் படிப்பிற்கான மெரிட் லிஸ்ட்டில் 5,726 பேர் இடம் பிடித்துள்ளனர். பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு புதுச்சேரி மாணவர்கள் 1,046, பிற மாநில மாணவர்கள் 330 பேர் விண்ணப்பித்து மெரிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.பி.எஸ்.சி., அக்ரி தோட்டக்கலை படிப்பிற்கு கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரியில் இருந்து 1,437, பிற மாநிலங்களில் இருந்து 419, என்.ஆர்.ஐ., 4 பேர் இடம் பெற்றுள்ளனர். பையாலஜி படிப்புகளுக்கு புதுச்சேரியில் இருந்து 3,475 பேர், பிற மாநிலங்களில் இருந்து 762, என்.ஆர்.ஐ., 7 பேர் இடம் பிடித்துள்ளனர்.பி.பார்ம்., படிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து 3,210, பிற மாநிலங்களில் இருந்து 697, என்.ஆர்.ஐ.,7 பேர் இடம் பிடித்து உயர்கல்வி வாய்ப்பிற்கான காத்திருக்கின்றனர். பி.டெக்., படிப்பிற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து 4,789, பிற மாநிலங்களில் இருந்து 695 விண்ணப்பங்கள் குவிந்து வரைவு மெரிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.இதுமட்டுமின்றி, பி.வி.எஸ்.சி., பி.பி.டி., பி.எஸ்.சி., பாராமெடிக்கல், டி.ஏ.என்.எம்., படிப்புகளுக்கும் வரைவு மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாணவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக வரும் 20ம் தேதி காலை 11 மணிக்குள் தெரிவிக்கலாம். நர்சிங் படிப்புகளுக்கு தனியாக மெரிட் லிஸ்ட் வெளியிடப்படும் என சென்டாக் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்