உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் 6,000 மாணவர்கள் ஏமாற்றம் 2 அரசு கல்லுாரிகளே இருப்பதால் அதிருப்தி

திருவாலங்காடு: கடந்த சில ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, மாணவ மாணவியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில், இரண்டே அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளதால், 6000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டங்களில் இருந்து, ஆண்டுதோறும் 30,000 மாணவ மாணவியர், 12ம் வகுப்பு முடித்து, கல்லுாரி படிப்புக்கு செல்கின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் சில தனியார் பள்ளி மாணவர்களின் முதல் தேர்வாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளே உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் லோகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லுாரி மற்றும் திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி என, இரண்டு கல்லுாரிகள் மட்டுமே உள்ளன.திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் செயல்படும், 17 பாடப்பிரிவுகளில், ஆண்டுதோறும், 948 மாணவ மாணவியர் பயில இடங்கள் உள்ளன.இளங்கலை பாடப் பிரிவுகளில் சேர, அரக்கோணம், திருத்தணி, கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 4,000 முதல் 5,000 மாணவ - மாணவியர், ஒவ்வொரு கல்வியாண்டிலும் விண்ணப்பிக்கின்றனர்.அதே போல், பொன்னேரி லோகநாத நாராயண சாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 13 இளநிலை பட்டப் படிப்புகள் உள்ளன. இங்கு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 4,000 மாணவ மாணவியர் விண்ணப்பிக்கின்றனர். இக்கல்லுாரியில், 686 இடங்களே உள்ளன.இரு கல்லுாரிகளிலும், ஒரு கல்வியாண்டில், குறைந்தது 8,000 பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். ஆனால், 1,634 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், ஆண்டுக்கு, 6,300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் 1965ம் ஆண்டும், திருத்தணியில் 1970ம் ஆண்டும் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் தொடங்கப்பட்டன.அதன் பின், 55 ஆண்டுகளாக, ஒரு அரசு கலை கல்லுாரி கூட தொடங்கப்படவில்லை. எனவே, மாவட்ட தலைநகரான திருவள்ளூரில், கூடுதலாக ஒரு அரசு கலை கல்லுாரி ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என, மாணவ மாணவியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.படிக்க சென்று வர 5 மணி நேரம் ஆகிறது மாவட்டத்திற்கு திருத்தணி, பொன்னேரி அரசு கல்லுாரிகள் மட்டும் போதாது. திருவாலங்காடு, மணவூர், செஞ்சிபானம்பாக்கம், கடம்பத்துார், பேரம்பாக்கம் உட்பட, சுற்றுவட்டாரத்தில் உள்ள 500 கிராமங்களில் இருந்து மாணவ மாணவியர், இளங்கலை பட்டப்படிப்புக்காக சென்னை செல்கின்றனர். சென்று வர, ரயில், பேருந்து பயணம் என, 5 மணி நேரமாகிறது. இதனால், அவர்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். பெற்றோரும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளோம். திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைந்தால், சென்று வர வசதியாக இருக்கும். - பாரதிதாசன், திருவாலங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்