உள்ளூர் செய்திகள்

கோவையில் 94.01 சதவீத தேர்ச்சி

கோவை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.01 சதவீத தேர்ச்சியுடன், மாநில அளவில் கோவை மாவட்டம் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவிகளே, அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 19 ஆயிரத்து 614 மாணவர்கள், 20 ஆயிரத்து 126 மாணவிகள் என 39 ஆயிரத்து 740 பேர் எழுதினர். இதில், 17 ஆயிரத்து 938 மாணவர்கள், 19 ஆயிரத்து 422 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 94.01 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் கோவை மாவட்டம், 12வது இடத்தைப் பிடித்துள்ளது.கடந்த ஆண்டு, 93.49 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 0.52 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டில் மாநில அளவில் 13வது இடத்தைப் பிடித்த நிலையில், இந்த ஆண்டு 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.ரிசல்ட் வெளியானதைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 1 சேர்க்கைப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலிலும், கோவை மாவட்டம் முன்னேறியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தேர்ச்சி பெற்ற, பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டி குழு மூலமாக, முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்