1 வாரத்தில் தனியார் பள்ளி கட்டண அறிக்கை?
சென்னை: இன்னும் 1 வாரத்திற்குள், தனியார் பள்ளிகளுக்கான கட்டண விகித அறிக்கையை அளிக்குமாறு, ரவிராஜ பாண்டியன் கமிட்டியை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபிதா கூறுகையில், "புதிய கட்டண விவரங்கள் இம்மாதம்(மே) 31 ம் தேதிக்குள் முதலமைச்சரால் அறிவிக்கப்படும்" என்றார். ரவிராஜ பாண்டியன் கமிட்டியானது, 1 வாரத்திற்குள் தனது அறிக்கையை வழங்கிவிடும். பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆகிய இரு தரப்பாரின் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கமிட்டியின் அறிக்கையை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்கள், வேறு சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள். பழைய கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரையை ஏற்று செயல்படும் பள்ளிகள் தனியாக உள்ளன. மொத்தம் 6500 பள்ளிகள்தான் கோவிந்தராஜன் கமிட்டி அறிக்கையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தன. எனவே பழைய பரிந்துரையை ஏற்று செயல்படும் பள்ளிகள், அந்த நடைமுறையையே தொடர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.