உள்ளூர் செய்திகள்

செப்.1ல் இன்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் துவக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் இன்ஜினியரிங் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்றுடன்(14ம் தேதி) முடிவடைகிறது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங், வருகிற 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. பிளஸ்  2 உடனடி தேர்வெழுதி, இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்ற மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 21ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. இவர்களுக்கான இன்ஜினியரிங் துணைக் கவுன்சிலிங்கை, மூன்றாம் கட்ட இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்த மறுநாள் (ஆகஸ்ட் 27ம் தேதி) நடத்த, சென்னை அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, ஏ.சி.டெக் இன்ஜினியரிங் கல்லூரி, எம்.ஐ.டி., இன்ஜினியரிங் கல்லூரி, எஸ்.ஏ.பி. இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவற்றில் கடந்த 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. இந்த நான்கு கல்லூரிகள் தவிர தமிழகத்தில் உள்ள மற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளில் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வகுப்புகள் துவங்குகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு மற்றும் தேர்வு தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய இளநிலை படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் வகுப்புகள் செப்டம்பர் முதல் தேதி துவங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறும். இதில் 450 வகுப்புகள் நடைபெற வேண்டும். இளநிலை மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் 2009ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் நடைபெறும். ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கிய எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் வகுப்புகள் டிசம்பர் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் 350 வகுப்புகள் நடைபெற வேண்டும். முதுநிலை மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் டிசம்பர் 29ம் தேதி முதல் நடைபெறும். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் 2009ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்