10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி: தனித்தேர்வர்கள் செப்., 15 முதல் பதிவு செய்யலாம்!
சென்னை: 2026-27ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் செப்., 15 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முறையாக அனைத்துப் பாடங்களையும் எழுதவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும், கடந்த 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்தவர்களும் இந்த செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய தேர்வர்கள் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை உரிய மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களை நேரில் அணுக வேண்டும். அங்கு பதிவுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் தேர்வர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் குறைந்தபட்சம் 80 சதவீத வருகைப்பதிவு பெற்ற தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத்தேர்வுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இதனைத் தொடர்ந்து, பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன், மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதிகளை அறிந்து தேர்வை எழுத வேண்டும்.செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பின்னர் தியரி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கும் போது, அரசு சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது இந்த ஒப்புகைச் சீட்டு மற்றும் முந்தைய மதிப்பெண் சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அங்கு வழங்கப்படும் விண்ணப்ப எண்ணை வைத்தே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், ஹால் டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்விற்குள் அனுமதிக்கப்படுவர். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும், தேர்வுத் துறை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.