10ம் வகுப்பு தேர்வுக்கு 4 புதிய மையங்களுக்கு கோரி விண்ணப்பம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு நான்கு புதிய மைங்கள் கோரி, பள்ளி கல்வி துறை இயக்குனரகத்துக்கு விண்ணப்பங்கள் சென்றுள்ளன.தமிழகத்தில், 2024 பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 1ல் துவங்கி, 22ல் நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு தேர்வு மார்ச், 26ல் துவங்கி ஏப்., 8ல் நிறைவு பெறுகிறது. 2023 மார்ச்சில் ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்புக்கு 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்முறை கூடுதலாக பெரிய புலியூர், பாசூர், ஈங்கூர், சென்னிமலையில் தலா ஒரு பள்ளி சார்பில், ஒரு தேர்வு மையம் தேவை என, பள்ளி கல்வி துறையினரிடம் விண்ணப்பித்துள்ளனர்.இதன் அடிப்படையில், மாவட்ட பள்ளி கல்வி துறை அலுவலர்கள், இப்பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுத தயாராக இருக்கும் மாணவ, மாணவிகள், தேர்வு அறைகள், பள்ளி உள் கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு வசதி, வினாத்தாள் கட்டு காப்பு மையத்தில் இருந்து புதிதாக மையம் கோரும் பள்ளிக்கான தொலைவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை தயார் செய்து, பள்ளி கல்வி துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பிளஸ் 2 பொது தேர்வுக்கு புதிதாக எந்த பள்ளியும் விண்ணப்பிக்கவில்லை. 2023ல் இருந்த அதே, 105 தேர்வு மையங்கள், 2024 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுக்கும் அமைக்கப்படும் என்பதை பள்ளி கல்வி துறையினர் உறுதி செய்தனர்.