1,000 டன் எடையில் பிரமாண்ட சூர்யா ராக்கெட் வடிவமைக்கும் பணியை துவங்கியது இஸ்ரோ
சென்னை: முப்பதாயிரம் கிலோ எடை உள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், 93 மீட்டர் உயரத்தில், 1,000 டன் எடை உடைய பிரமாண்ட ராக்கெட் வடிவமைக்கும் பணியை இஸ்ரோ துவக்கியுள்ளது. புதிய தலைமுறைக்கான இந்த ராக்கெட்டிற்கு, சூர்யா என பெயரிடப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் வாயிலாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவி, புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தி வருகிறது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1,750 கிலோ எடையுடைய செயற்கைக்கோளை சுமந்தும் செல்லும் திறன் வாய்ந்தது.இது, பூமியில் இருந்து புறப்படும் போது எரிபொருள் உட்பட மொத்தம், 320 டன் எடையை சுமந்து செல்லும். இதன் உயரம் 44.40 மீட்டர்.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், 6,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதன் உயரம், 51.73 மீட்டர். இது, பூமியில் இருந்து 420 டன் எடையை சுமந்து செல்கிறது.ஜி.எஸ்.எல்.வி., மாக் - 3 வகையைச் சேர்ந்த, எல்.வி.எம்., - 3 ராக்கெட், 8,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் உடையது. இது, பூமியில் இருந்து 642 டன் எடையை சுமந்து செல்லும் சக்தி வாய்ந்தது. இதுவரை இதுவே, அதிக எடையை சுமந்து செல்லும் ராக்கெட்டாக உள்ளது.தற்போது, 1,000 டன் எடை உடைய, 93 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட ராக்கெட் உருவாக்கும் பணியை, இஸ்ரோ துவக்கியுள்ளது. இந்த ராக்கெட், 30,000 கிலோ எடை உடைய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் உடையது.முதலாவது தேசிய விண்வெளி தினம், நேற்று முன்தினம் டில்லியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்முபங்கேற்றார். அவர் பார்வையிடுவதற்காக, சூர்யா ராக்கெட்டின் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து இஸ்ரோவின் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.பி.எஸ்.சி., எனப்படும், திரவ இயக்க திட்ட மைய இயக்குனரும், மூத்த விஞ்ஞானியுமான வி.நாராயணன் கூறியதாவது: சூர்யா என பெயரிடப்பட்டு உள்ள என்.ஜி.எல்.வி., ராக்கெட்டை வடிவமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த ராக்கெட்டின் எடை கிட்டத்தட்ட 1,000 டன். இது, 30,000 கிலோ எடை உடைய செயற்கைக்கோளை சுமந்து செல்லும்.இதற்காக திரவ ஆக்சிஜன், திரவ மீத்தேன் எரிபொருளில் இயங்கும், 110 டன் உந்துவிசை தரக்கூடிய அதிநவீன உந்துவிசை இயந்திரம் உருவாக்கும் பணி நடக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் எல்.பி.எஸ்.சி., மையமும், மகேந்திரகிரியில் உள்ள ஐ.பி.ஆர்.சி., மையமும் இணைந்து, ராக்கெட் உந்து விசை இயந்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.ஜி.எஸ்.எல்.வி., மாக் - 3 ராக்கெட் உயரம், 43 மீட்டர். அதே சமயம், சூர்யா ராக்கெட் 93 மீட்டர் உயரம் உடையது. இது, 30 மாடி உயர கட்டடத்திற்கு இணையானது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட உள்ளது. இவ்வாறு கூறினார்.