உள்ளூர் செய்திகள்

11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.25 கோடி: சென்னை பல்கலை எதிர்பார்ப்பு

சென்னை: “சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,” என அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் நவ., 10ம் தேதி நிருபர்களிடம் கூறியதாவது:தொழிற்சாலை, வீட்டுக்கழிவுநீரை சுத்திகரிப்பது, திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகம் - ஜி.இ.டி., வாட்டர் சொல்யூஷன் நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டு அரசர் இரண்டாம் ஆல்பர்ட், 12ம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். அவருடன் அறிவியல் வல்லுனர்கள், பேராசிரியர்கள் என 60 பேர் கொண்ட குழு சென்னைப் பல்கலைக்கழகம் வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு 11வது திட்ட காலத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதி தொடர்பாக முடிவு செய்வதற்கான யு.ஜி.சி., குழு கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் ராமமூர்த்தி தலைமையிலான இந்த 13 பேர் குழு சென்னை பல்கலைக்கழகத்தின் 68 துறைகளையும், ஏழு மையங்களையும் நேரில் ஆய்வு செய்தது. சென்னைப் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து இக்குழு முழு திருப்தி தெரிவித்தது. 10வது ஐந்தாண்டு காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஐந்து கோடியே 17 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 177 கோடி ரூபாய் ஒதுக்குமாறு கேட்டோம். 10வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் போல மூன்று மடங்கிற்கு மேல் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்க முடியாது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதில் மாணவர் விடுதிக்காக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, நூலக வசதிகளை ஏற்படுத்துவது, தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றிற்காக இந்நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்