உள்ளூர் செய்திகள்

1,140 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடி!

சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகரட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகளை மாணவ, மாணவியருக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். பம்மலில் உள்ள சங்கரநேத்ராலயா, ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மாநகராட்சி ஏற்கெனவே நடத்திய கண் பரிசோதனை முகாமில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சியின் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இதேபோன்ற முகாம்கள் நடத்தப்படும். சுகாதார பரிசோதனை செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ள சாமானிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற மருத்துவ சோதனை முகாம்களை மாநகராட்சி நடத்துகிறது. 18 ஆயிரம் மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் படிக்கும் 10 மாணவர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்ய உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் நல்ல தேர்ச்சி விகிதத்தைப் பாராட்டிய அவர், இப்பள்ளியின் தரம் காரணமாக இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்