12 கல்லூரிகளுக்கு ரூ.100 கோடி: கல்வி அமைச்சர்
புதுடில்லி: டில்லி பல்கலையின் 12 கல்லுாரிகளுக்கு 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என டில்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறினார்.டில்லி கல்வி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் நேற்று கூறியதாவது:சில ஆண்டுகளாக அரசுக் கல்லுாரிகளில் நிதி நிர்வாகச் சீர்கேடுகள் நடந்துள்ளன. இதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என டில்லி அரசு முடிவு செய்தது. டில்லி பல்கலையின் 12 கல்லுாரிகளில் நிதி நிர்வாகத்தை சீரமைக்க 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. சில கல்லுாரிகளில் தணிக்கை நடந்து வருகிறது. டில்லி அரசு வழங்கியுள்ள 100 கோடி ரூபாயால் கல்லுாரி ஆசிரியர்களின் சம்பளம் மருத்துவப் பலன்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தடையின்றி கிடைக்கும்.தணிக்கையில் நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கல்லுாரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி அரசு அமைந்த பின், டில்லியில் நான்கு புதிய கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. பெண் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வித் துறைக்கு 2023-2024 நிதியாண்டில் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தரமான உயர் கல்விக்கே அரசு முன்னுரிமை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.