1,330 குறளையும் கற்க வேண்டும்: மாணவர்களுக்கு அண்ணாமலை அறிவுரை
அனுப்பர்பாளையம்: மாணவர்கள் 1,330 குறளையும் கற்க வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், திருக்குறள் உலக சாதனை விழா திருப்பூர், கணக்கம்பாளையம் கிருஷ்ண மஹாலில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் திருவேங்கடம் வரவேற்றார். பேருராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். மொத்தம் 34 பள்ளிகளை சேர்ந்த 1, 330 மாணவர்கள் கலந்து கொண்டனர்.வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவரும் ஒரு குறளை கூறினர். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி பேசியதாவது:குழந்தைகள் உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு மட்டுமே சூழ்ந்து இருக்கும். மாணவ செல்வங்களுக்கு கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்ற குறளை ஞாபகப்படுத்துகிறேன். எதை எல்லாம் கற்க வேண்டுமோ அதை சரியாக கற்றுக்கொண்டு, வாழ்க்கை முறையில் அந்த கல்வியை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் 1,330 குறளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.பிரதமர் மோடி, வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும் அதற்கு தீர்வு திருக்குறளில் உள்ளது என கூறுகிறார். வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு நுாலாக திருக்குறளை வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அண்ணாமலைக்கு இளம்புயல் பட்டம்முன்னதாக காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், பேருராதீனம், அண்ணாமலைக்கு இளம் புயல் என்ற பட்டத்தை வழங்கினார்.