157 மருத்துவ கல்லுாரிகள் துவக்கம் எப்போது?
ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தின் போது, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், நாட்டின் பல பகுதிகளில், 157 மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 2019ல், இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், 75 மருத்துவ கல்லுாரிகள் துவக்க, வழங்கப்பட்டுள்ள அனுமதியும் அடங்கும்.புதிதாக துவக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ள,157 மருத்துவக் கல்லுாரிகளில், 58 கல்லுாரிகள், முதல் கட்ட நிலையிலும், 24 கல்லுாரிகள், இரண்டாம் கட்ட நிலையிலும், சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்ட, 75 கல்லுாரிகள், மூன்றாம் கட்ட நிலையிலும் உள்ளன.கடந்த, 2014க்கு முன், நாட்டில், 50 ஆயிரம் மருத்துவக் கல்லுாரி இடங்கள் இருந்தன, கடந்த ஆறு ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை, 80 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லுாரிகள் ஒவ்வொன்றும், 325 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படுகின்றன. இந்த செலவை, மத்திய - மாநில அரசுகள், 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.