19 பள்ளி வாகனங்கள் மறு ஆய்வுக்கு உத்தரவு
மதுராந்தகம்: தமிழகம் முழுதும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதனால், செங்கல் பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி வாகனங்களின் தரம் குறித்த வாகன சோதனை நடந்தது.இந்த வாகன சோதனை யில், தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 151 வாகனங்களில், 142 வாகனங்கள் வந்திருந்தன. இந்த சோதனையில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., சுந்தரமூர்த்தி, செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அபிதா பானு.மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் இறங்கி, ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் தாழ்வாக அமைத்திருக்க வேண்டும். பேருந்து அவசரகால வழி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.இரண்டு கிலோ எடை கொண்ட, இரண்டு தீயணைப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் பேருந்துக்குள் முன், பின் என பொருத்தியிருக்க வேண்டும். இருக்கையில் கீழ் தளத்தில் ஓட்டைகள் இல்லாமலும், வாகன ஓட்டுனர் இருக்கை அருகே தடுப்பு கம்பி அமைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொண்டனர்.இச்சோதனையில், 142 வாகனங்களில், 123 வாகனங்கள் தேர்வாகின. 19 வாகனங்களில் உள்ள குறைபாடுகள், மீண்டும் சரி செய்து, மறு ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டனர். பின், வாகன ஓட்டுனர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் அறிவுரை வழங்கினர். ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.