உள்ளூர் செய்திகள்

2 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு கட் பெண் இன்ஜி., முறையீடு நிராகரிப்பு

கோவை: போலி வரைபடத்துக்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில், இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வை நிறுத்திய உத்தரவை எதிர்த்து, மாநகராட்சி பெண் இன்ஜினியர் செய்த மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி பொறியாளராக இருப்பவர் விமலா. இவர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், பல ஆண்டுகளாக உதவி நகர அமைப்பு அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.அப்போது, சிங்காநல்லுார் கிருஷ்ணா காலனியில், ரோடு மற்றும் பூங்காவுக்குரிய இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு, போலி வரைபடத்தை ஆய்வு செய்யாமல் திட்ட அனுமதி வழங்கப்பட்டது.இதில், நகர அமைப்பு அலுவலர் சசிப்ரியா, உதவி நிர்வாகப் பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகர அமைப்பு அலுவலர் விமலா ஆகியோர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதுபற்றி துணை கமிஷனர் செல்வசுரபி விசாரித்து, அறிக்கை சமர்ப்பித்தார்.அதன்படி, மாநகராட்சி பணியாளர் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல் முறையீடு) விதிகள் 8(2)ன் கீழ், அன்றைய கமிஷனர் பிரதாப் நடவடிக்கை எடுத்தார். சசிப்ரியா ஓய்வு பெற்று விட்ட நிலையில், மற்ற இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து, கமிஷனர் உத்தரவிட்டார்.இவர்களில் புவனேஸ்வரி, மேட்டூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டு விட்டார். விமலா, மேற்கு மண்டலத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் கூடுதலாகத் தரப்பட்டிருந்த உதவி நகர அமைப்பு அலுவலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.மேல்முறையீடுஇவர், தன் மீதான தண்டனையை ரத்து செய்து, பதவி உயர்வுக்கு வழிவகை செய்யும்படி, நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மேல் முறையீடு செய்திருந்தார்.அதில், வருவாய் உட்பிரிவு ஆவணங்களின் அடிப்படையில், அனுமதி வழங்கியதாகவும், வழங்கப்பட்ட திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து, ஊதிய உயர்வு தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.அந்த மேல் முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு, உதவி பொறியாளர் விமலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.இதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துள்ள கமிஷனரின் உத்தரவு சரியானதாகும்.எனவே, உதவி பொறியாளரின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்து ஆணையிடப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.தொடரும் அதிருப்திஉதவி பொறியாளர் விமலா மீதான தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது; கோவை மாநகராட்சியில், ஒரு உதவி பொறியாளருக்கு இரண்டு வார்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், குற்றச்சாட்டு நிரூபணமாகி, தண்டனைக்குள்ளான இவருக்கு ஐந்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மற்ற மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்