2 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
சென்னை: ராஜரத்தினம் மைதானத்தில், 2 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற, இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று துவக்கி வைத்தார்.சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு சென்னை காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் படி நேற்று இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ராஜரத்தினம் மைதானத்திலிருந்து, பழைய கமிஷனர் அலுவலகம் வரை நடந்தது. பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த, 2 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற இப்பேரணியை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, சைபர் தொழில்நுட்ப உலகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகளை வெளியிட்டார். பின் கமிஷனர் தலைமையில் மாணவியர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.