2,239 மருத்துவ விண்ணப்பம் கோவையில் வினியோகம்
கோவை: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கோவை மருத்துவக் கல்லுாரியில் 2,239 விண்ணப்பங்கள் விற்பனையாகின. தமிழகத்தில் உள்ள, 20 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள, 2,723 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான விண்ணப்ப வினியோகம் மே, 26ல் துவங்கியது. நேற்று நிறைவடைந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், ௧௫௦ எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் கல்லுாரி வளாகத்தில், கடந்த, 12 நாட்கள் விறுவிறுப்பாக நடந்தது. பொதுப்பிரிவினர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனித் தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லுாரி சார்பில், விண்ணப்பக் கட்டணம், 500 ரூபாய்க்கான டி.டி., பெற, வங்கியின் சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று வரை பொதுப்பிரிவில், 1,798, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில், 441 என, மொத்தம் 2,239 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பிளஸ்௨ தேர்வில், முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு, பொது நுழைவு தேர்வு குழப்பம், இணையதளம் மூலம் பதிவிறக்கம் ஆகிய காரணங்களால், விண்ணப்ப வினியோகம் குறைந்ததாக கூறப்படுகிறது.