25 ஆண்டாக பணி நியமனம் இல்லை : மனையியல் பட்டதாரிகள் தவிப்பு
மாநிலம் முழுவதும் பல கல்லூரிகளில் மனையியல் பட்டப்படிப்பு உள்ளது. பல பல்கலைக்கழகங்களும் இந்த படிப்பினை ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆனால் 25 ஆண்டுகளாக இந்த படிப்பு படித்தவர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும் தொடர்ந்து இந்த படிப்புகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் நியமிக்கப்படும் மனையியல் பட்டதாரிகள் அங்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை நடத்தி வருகின்றனர்.மாநிலம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் 2000ம் ஆண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மனையியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த பிரிவிற்கு பணி நியமனம் நடக்கவில்லை. பணி நியமனம் இல்லாததால் சில பள்ளிகளில் இந்த பாடப்பிரிவுகளை நிறுத்தி விட்டனர். மனையியல் பட்டதாரிகள் கூறியதாவது: இந்த பாடங்களை முதுகலை, இளங்களை படித்தவர்கள் பெண்கள் மட்டுமே. அதன் பின்னர் பி.எட்., படித்துள்ளோம். பிளஸ் 2 முடித்த பின்னர் இரண்டாண்டு மட்டும் ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பிளஸ் 2விற்கு பின்னர் ஆறு ஆண்டுகள் படித்த எங்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.பல்கலை., மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு இல்லாத இந்த படிப்பை எதற்கு பாடமாக வைக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் இந்த படிப்பு படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் போது அரசு பள்ளிகளில் ஏன் நியமிக்க கூடாது. பணி நியமன வாய்ப்பே இல்லாத ஒரு பாடத்தை நடத்த அரசு ஏன் கல்லூரி, பல்கலை.,க்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தெரியவில்லை. மனையியல் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கூடாது என எந்த சட்டமும் வெளியிடப்படவில்லை. நாங்கள் அத்தனை உயர் அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டும் பலன் இல்லை. முதல்வர் எங்கள் விஷயத்தை கவனித்தால் நல்லது. இவ்வாறு தெரிவித்தனர்.