உள்ளூர் செய்திகள்

2,752 ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 344 புதிய பள்ளிகள் துவங்குதல், 282 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், 2,752 ஆசிரியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தை தொடர்ந்து (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,-ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்) அமல்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியரை, தொடர்ந்து 9, 10 ஆகிய வகுப்புகளை முடிக்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், நடப்பு கல்வியாண்டுக்காக, பல்வேறு திட்டங்களை தீட்டி, திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழுவிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதை ஆய்வு செய்த குழு, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை ஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்தமாக 625 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிதாசன் பல்கலையுடன் சேர்ந்து, கல்வித்துறை நடத்திய ஆய்வில், தமிழகத்தில் கூடுதலாக 1,944 நடுநிலைப்பள்ளிகள் தேவை என கண்டறிந்துள்ளது. இந்த பள்ளிகளை துவக்கிட, மத்திய அரசின் அனுமதி ஏற்கனவே கோரப்பட்டது. இதில், கடந்த ஆண்டு 200 பள்ளிகள் துவக்கப்பட்டன. மீதமுள்ள 1,744 பள்ளிகளை, ஐந்து கட்டங்களாக துவக்கிட, தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 1,087 பள்ளிகள், 2011-12ல் 195 பள்ளிகள், 12-13ல் 186 பள்ளிகள், 13-14ல் 139 பள்ளிகள், 14-15ல் 137 பள்ளிகள் துவக்கிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இதை ஏற்று, படிப்படியாக அனுமதி வழங்கிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் குழுவின் முக்கிய அறிவிப்புகள்: * நடப்பு கல்வியாண்டில் (2010-11) 282 பள்ளிகள் தரம் உயர்த்திட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், தலா இரண்டு வகுப்புகள் துவங்கலாம். * புதிதாக 344 பள்ளிகளை துவக்கலாம். 879 பள்ளிகளுக்கு, பல்வேறு கூடுதல் வசதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, 1,851 கூடுதல் வகுப்பறைகள், 698 அறிவியல் ஆய்வகங்கள், 735 கம்ப்யூட்டர் லேப்கள், கைவினைப்பொருள் தயாரிக்கும் அறைகள் 860, 837 நுõலகங்கள், 474 கழிவறைகள் (தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில்), 213 குடிநீர் வசதி திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. * 560 பள்ளிகளில், பழுதுபார்ப்பு திட்டங்களுக்கு அனுமதி கோரி அறிக்கை தரப்பட்டது. அதில், 381 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 10 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். * 4,593 பள்ளிகளுக்கு, பத்திரிகை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தலா 50 ரூபாய் வழங்கப்படும். 4,092 பள்ளிகளில், சிறிய பழுதுகளை சீர்செய்ய தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. * 4,394 தலைமை ஆசிரியர்கள் <உட்பட 33 ஆயிரத்து 556 ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்படும். 344 புதிய பள்ளிகளில், புதிதாக 2,752 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 344 உதவியாளர்களும் நியமிக்கப்படுவர். இவ்வாறு குழு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்