உள்ளூர் செய்திகள்

ஓஷன் ஒலிம்பியாட் 2026 தேசிய போட்டி

சென்னை: ஆழ்கடலின் விசித்திரங்களையும், கடல் அறிவியல் நுட்பங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், 'ஓஷன் ஒலிம்பியாட் இந்தியா 2026' என்ற பிரம்மாண்ட தேசிய அளவிலான அறிவுப் போட்டியை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.இந்திய மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டவும், கடல்சார் விழிப்புணர்வு, நீலப் பொருளாதாரம் மற்றும் கடல் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த அறிவை வளர்க்கவும் இப்போட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் க்விஸ் இட் நிறுவனம் இப்போட்டியின் அறிவுசார் பங்குதாரராக செயல்படுகிறது. இப்போட்டி முற்றிலும் நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.முதல் கட்டமாக இணையவழி டிஜிட்டல் தேர்வு நடத்தப்படும். இதில் மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே பங்கேற்கலாம். இதில் சிறப்பிடம் பிடிக்கும் முதல் 200 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவர்.இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தகுதிப் போட்டி, அதிநவீன மொபைல் அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் நடத்தப்படும். இந்த சுற்றில் இருந்து இறுதிப்போட்டிக்கு சிறந்த 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.மேலும், இறுதிச் சுற்றான 'கிராண்ட் பினாலே' மேடையில் நேரடி வினாடி வினா போட்டியாக நடைபெறும். இதில் கடல்சார் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் வெற்றி பெறும் மாணவர்களுக்குத் தேசிய அளவிலான சாம்பியன் பட்டமும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.இப்போட்டியில் கடல் அறிவியல், நீரோட்டங்கள், கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு, இந்தியாவின் பெருமைமிக்க 'சமுத்திரயான்' மற்றும் ஆழ்கடல் திட்டங்கள், காலநிலை மாற்றம் போன்ற முக்கியமான தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். போட்டிக்கான ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இது குறித்த கூடுதல் விவரங்களை oceanolympiad.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்