ஸ்டார்ட் அப் முதலீட்டை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் நிதியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கோவை: “தமிழகத்தில், ஸ்டார்ட் அப் சூழலை வலுப்படுத்தும் விதமாக, 100 கோடி ரூபாயில், 'இணை உருவாக்க நிதியம்' துவக்கப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.உலக புத்தொழில் மாநாடு, கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று துவங்கியது. மாநாடு இன்று நிறைவடைகிறது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:அமைதியான, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தை தேடியே, தொழில் துறையினர் வருவர். தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கையின் அடையாளமாக, இதுபோன்ற மாநாடுகள் நடக்கின்றன.தமிழகத்தை, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது என்ற இலக்கை அடைய முனைப்புடன் செயலாற்றுகிறோம். பெரிய தொழில்கள், எம்.எஸ்.எம்.இ., புதிய ஸ்டார்ட் அப்களும் முக்கிய பங்காற்றுகின்றன. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், ஸ்டார்ட் அப் சார்ந்த விழிப்புணர்வு பரவ வேண்டும் என்பதே இலக்கு.தலைசிறந்த மையம் உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழகம் கட்டமைக்கப்படும். அதில், முக்கிய மைல்கல்லாக இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக, ஸ்டார்ட் அப் வளர்ச்சி விவாதங்கள், பில்லியன் டாலர், பெரிய முதலீடுகள் என்பதை மையமாக கொண்டு அமைகின்றன.தமிழகத்தை பொறுத்தவரை புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள் எல்லாரையும் சென்றடைய வேண்டும் என திட்டமிடுகிறோம். புத்தொழில் கொள்கையிலும் சமூக நீதி; அதுவே திராவிட மாடல் பாலிசி. நம் தொடர் முயற்சிகளால் தமிழகத்தின் ஸ்டார்ட் அப் சூழலில், குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிகழ்த்தி உள்ளோம்.தமிழகத்தில், 2021ல், 2,032 ஆக இருந்த பதிவு பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது ஆறு மடங்கு அதிகமாக, 12,000த்தை தாண்டியுள்ளது. இதில், தனிப்பட்ட முறையில் மகிழ்வான செய்தி, சரிபாதி நிறுவனங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துகின்றனர் என்பதே.கடந்த, 2018ல் ஸ்டார்ட் அப் கட்டமைப்பு தர வரிசையில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், 2022ல் முதல் இடத்துக்கு உயர்ந்தது. 'ஸ்டார்ட் அப் ஜீனோம்' அமைப்பின், உலகளாவிய புத் தொழில் சூழல் அறிக்கை, 2024ன்படி, ஆசியாவில், 18வது இடத்தில் சென்னை உள்ளது.நிடி ஆயோக்கின் கீழ் செயல்படும், 'அடல் இன்னொவேஷன் மிஷன்' அமைப்பு, ஸ்டார்ட் அப் சூழல் சிறப்பாக இருக்கும் மாநிலங்களின் முன்மாதிரியாக தமிழகத்தை அங்கீகரித்துள்ளது.உயர் தொழில்நுட்ப துறையின், 'பவர் ஹவுஸ்' ஆக சென்னை வளர்ந்து வருகிறது. 2021- - 2024 காலக்கட்டத்தில், சென்னையை மையமாக கொண்ட உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு, 66 சதவீத ஆண்டு கூட்டு வளர்ச்சியை எட்டியுள்ளது. இது, தேசிய அளவில் இரண்டாவது இடம்.'டான்சீடு' திட்டம் தொடக்கநிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நிதியின்றி முயற்சியை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக, 'டான்சீடு' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பெண் தொழில்முனைவோருக்கு, 50 சதவீதம் கூடுதல் நிதி வழங்கப் படுகிறது. இத்திட்டத்துக்கு மட்டும், 20 கோடியாக ஒதுக்கப்பட்டு ள்ளது.எந்த துறையாக இருந்தாலும் சமூக நீதி முக்கியம். அதன்படி, பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் நிர்வகிக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு வழங்கப்படுகிறது. இதற்காக, 30 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீடு, 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஸ்டா ர்ட் அப் நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும், 'டான் பண்டு' கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதில், 129.24 கோடி நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.40 நாடுகள் பங்களிப்பு நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழாவில், 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடும்' முக்கிய பங்கு வகிக்கிறது. உலக நாடுகளின் பங்களிப்புடன் ஸ்டார்ட் அப்களுக்கான சிறப்பு மாநாட்டை தற்போது ஒருங்கிணைத்துள்ளோம்.இம்மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் உரையாற்றுகின்றனர். 21 நாடுகள் அரங்குகள் அமைத்துள்ளன. நாட்டிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக, 40 நாடுகளின் பங்களிப்போடு ஒரு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.சரியான வாய்ப்பு பன்னாட்டு ஸ்டார்ட் அப் அமைப்புகள், இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்கள், மத்திய அரசின் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, தமிழக நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும்.தமிழ கத்தின் ஸ்டார்ட் அப் சூழலை வலுப்படுத்தும் விதமாக புதிய திட்டத்தை அறிவிக்கிறோம். 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், 'இணை உருவாக்க நிதியம்' துவங்கப் ப டும். தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செ ய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில், அரசு முதலீடு செய்யும்.இந்த நிதியம், ஸ்டார்ட் அப் டி.என்., அமைப்பால் நிர்வகிக்கப்படும். இதன் வாயிலாக, தமிழகத்தில் புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். உலக அளவில் முன்னணியில் உள்ள முதலீட்டு நிறுவனங்களை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வழிவகுக்கும்.இவ்வாறு, முதல்வர் பேசினார். அடுத்த மாதம் செம்மொழி பூங்கா!முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: கோவையில், தமிழகத்திலேயே நீளமான, 10.1 கி.மீ., நீளமுள்ள அவிநாசி சாலை மேம்பாலம் திறக்கப்படுகிறது. ஈ.வெ.ரா.,வின் உற்ற தோழரும், 'இந்தியாவின் எடிசன்' என அழைக்கப்பட்ட, கோவைக்கு பெருமை சேர்த்த ஜி.டி.,நாயுடு பெயரை சூட்டியுள்ளேன். கடந்த நவம்பரில் கோவை வந்தபோது, தங்க நகை உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறேன். அடுத்த மாதம் கோவையில் மிகப்பெரிய பூங்காவாக, 175 கோடி ரூபாயில், செம்மொழி பூங்கா திறக்க உள்ளோம். தொடர்ந்து மிகப்பெரிய நுாலகம் விரைவில் திறக்க உள்ளோம். கோவையில் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் வர உள்ளது. கோவையின் வளர்ச்சிக்கு துணை நிற்கக் கூடிய திராவிட மாடல் அரசின் பயணம், திராவிட மாடல் 2.0விலும் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.