40 ஆண்டு, அரியரா? நம்பிக்கை இழக்க வேண்டாம்!
சென்னை: சென்னை பல்கலையின், தொலைதுார கல்வி நிறுவனத்தில் படித்து, 40 ஆண்டுகள் வரை அரியர் வைத்துள்ளவர்கள், மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற, இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் லட்சக்கணக்கான மாணவ - மாணவியர், பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.இந்த பல்கலைகளில் படித்து, பல ஆண்டு களாக அரியர் வைத்துள்ள மாணவ - மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் வைத்து, நிர்வாக குழு ஒப்புதலுடன், அவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், நுாற்றாண்டு பழமையான சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் படித்து, அரியர் வைத்துள்ளவர்களுக்கு, தேர்வு எழுத பல்கலை இறுதி வாய்ப்பு வழங்கி உள்ளது. இது குறித்து, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அருள்வாசு வெளியிட்ட அறிக்கை:சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், 1981 - 82ம் கல்வியாண்டு முதல், 2018 வரை, இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ், பி.எல்.ஐ.எஸ்., - எம்.எல்.ஐ.எஸ்., ஆகிய படிப்பில் சேர்ந்து, தற்போது அரியர் வைத்துள்ள மாணவ - மாணவியர், அப்பாடங்களில் தேர்வெழுதி தேர்ச்சி பெற, இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள மாணவர்கள், www.ideunom.ac.in இணையதளத்தில், வரும் 10ம் தேதியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.