உள்ளூர் செய்திகள்

415 மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி கல்வி ஊக்கத்தொகை

பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்வி அறக்கட்டளை சார்பில், கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 415 மாணவ, மாணவியருக்கு ரூ. 1.5 கோடி கல்வி ஊக்கத்தொகை கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் விஸ்வநாதன் வரவேற்றார். பி.ஜி.பி. குரூப்ஸ் கம்பெனி மற்றும் கல்வி நிறுவனங்கள் சேர்மன் பழனி ஜி. பெரியசாமி 415 மாணவ மாணவியருக்கு ஒரு கோடியே ஐந்து லட்சத்து 84 ஆயிரத்து 250 ரூபாய் கல்வி ஊக்க உதவித்தொகையை வழங்கி பேசியதாவது: ஒரு கல்வி நிறுவனம் வசூல் செய்யும் கட்டணத்தில் 30 சதவீதம் தொகையை நூலக புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வாங்க செலவு செய்கிறது. மீதியுள்ள 70 சதவீதம் தொகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளத்துக்கு செலவு செய்கிறது. நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சமுதாய சிந்தனையாளர்கள் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து, நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தால் மாணவர்கள் இடையே எழுதுவது, புத்தகங்கள் வாங்கி படிக்கும் எண்ணம் இல்லாமல் போய் விட்டது. புத்தகங்கள் படிப்பதையும், எழுதுவதையும் என்றைக்கும் மறக்கக் கூடாது. குறிக்கோளுடன் செயல்படுங்கள், நாட்டின் நலனில் அக்கறைக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார். ஒவ்வொரு பட்ட பிரிவிலும் முதல் ஐந்து இடம் பெற்ற 246 மாணவ மாணவியருக்கு 44 லட்சத்து 53 ஆயிரத்து 750 ரூபாய், ஏ.ஐ.சி.டி.ஈ. பரிந்துரையில் சேர்க்கப்பட்ட 108 மாணவ மாணவியருக்கு 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், 24 விளையாட்டு வீரர்களுக்கு 13 லட்சத்து 500 ரூபாய், கொங்கு வேளாளர் சங்கம் சார்பில் எட்டு மாணவ மாணவியருக்கு மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாய், 28 பணியாளர் குழந்தைகளுக்கு 11 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாயும், அறக்கட்டளை சார்பில் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 415 மாணவ மாணவியருக்கு ஒரு கோடியே ஐந்து லட்சத்து 84 ஆயிரத்து 250 ரூபாய் கல்வி ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டது. அறக்கட்டளை உறுப்பினர்கள் ராமசாமி, தங்கவேல் கவுண்டர், கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் குப்புசாமி, துணை முதல்வர் கிருஷ்ணசாமி, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வேதகிரிஈஸ்வரன், துணை முதல்வர் தாமோதரன் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்