உள்ளூர் செய்திகள்

5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஜூலை 10ல் ஆஜராக உத்தரவு

சென்னை: கடலுாரில் தனியார் பள்ளி வசமுள்ள, கோவில் நிலத்தை மீட்க பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து, பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜூலை 10ம் தேதி ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமத்தில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. மாவட்டத்தின் பிரதான பகுதியில் உள்ள கோவில் நிலத்தில், 3.40 ஏக்கரில், புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலம், பல கோடி ரூபாய் மதிப்புள்ளது.இந்த கோவில் நிலத்தை மீட்டு, அங்கிருந்து தனியார் பள்ளியை அகற்றக்கோரி, கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, 2019ல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை நிறைவேற்ற, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டிருந்தது.கடந்த 2009ல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், நிலத்தை மீட்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதேபோல், கடந்தாண்டு இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கோவில் நிலத்தை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக வருவாய் துறை செயலர் உள்ளிட்டோர் ஜூலை 10ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அமுதா, மதுமதி, சந்திரமோகன், ஸ்ரீதர், சிபிஆதித்யா செந்தில்குமார், அறநிலையத்துறை அதிகாரிகள் பரணிதரன், வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஜூலை 10ல் நேரில் ஆஜராக வேண்டும் என, நீதிபதிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்