உள்ளூர் செய்திகள்

ரூ.55 லட்சம் அரசு நிதியில் முறைகேடு: ஒடிசா பள்ளியின் முன்னாள் முதல்வர் கைது

புவனேஸ்வர்: அரசின் நிதியில் ரூ.55 லட்சம் முறைகேடு செய்த ஒடிசாவின் அரசு உதவிபெறும் பள்ளியின் முன்னாள் முதல்வரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.ஒடிசா ஆதர்ஷா வித்யாலயா என்பது மாநில அரசு மற்றும் ஆதர்ஷா வித்யாலயா சங்கம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் ஒரு பள்ளியாகும். இங்கு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்கி, தரமான கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தின் பினிகாவில் இயங்கி வரும் இந்த பள்ளியின் முதல்வராக ஸ்ரீ சவும்ய ரஞ்சன் கேதி பணியாற்றினார். இந்த பள்ளியில் மதிய உணவுத் திட்டம், மோ ஸ்கூல் அபியான் மற்றும் பெண்கள் விடுதி செயல்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,ஸ்ரீ சவும்ய ரஞ்சன் கேதி தான் பணியாற்றிய 2021-22 மற்றும் 2024-25 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தனது அதிகாரப்பூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்து, ரூ.55,02,610 நிதியை தவறாக பயன்படுத்தி, அவற்றை ஆன்லைன் பந்தய செயலியான “டீன் பட்டி”யில் சூதாட்டத்திற்காகப் பயன்படுத்தியதாக தெரியவந்த நிலையில் ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்