6 உயர்கல்வி நிறுவனங்கள் நிகர்நிலை அந்தஸ்து கேட்டு யு.ஜி.சி.,யிடம் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் ஒரு கல்வி நிறுவனம் உட்பட, நாடு முழுவதும் ஆறு உயர் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை அந்தஸ்து கேட்டு, யு.ஜி.சி.,யிடம் விண்ணப்பித்துள்ளன. உரிய கட்டமைப்பு வசதி, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற காரணங்களால், தமிழகத்தில் உள்ள, 16 நிகர்நிலைப் பல்கலைகள் உட்பட, நாடு முழுவதும், 41 நிகர்நிலைப் பல்கலைகளின் அந்தஸ்து தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. இதற்கிடையில், நிகர்நிலை அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகளை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை கடுமையாக்கி உள்ளது. அதன்படி, ஒரு கல்லுாரி நிகர்நிலை அந்தஸ்து பெற வேண்டும் எனில், 15 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்; தேசிய அங்கீகார கவுன்சிலான - நாக்கின், ஏ கிரேடு அந்தஸ்து பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு கல்வி நிறுவனம் உட்பட, நாடு முழுவதும், ஆறு கல்வி நிறுவனங்கள் நிகர்நிலை அந்தஸ்து கேட்டு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யிடம் விண்ணப்பித்துள்ளன. சென்னை அருகே செயல்படும் ஒரு கல்வி குழுமத்தின், சித்தா ஆராய்ச்சி மையத்திற்குதான், நிகர்நிலை அந்தஸ்து கேட்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இங்கு, யு.ஜி.சி., அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வர் என்றும் கூறப்படுகிறது.