6 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல்
புதுடில்லி: டில்லியில் ஆறு பள்ளிகளுக்கும், மூன்று வங்கிகளுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு உடனடியாக வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் போலீசார், தீயணைப்பு துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், நடைபெற்ற சோதனைகளுக்கு பின், அவை, பீதியை ஏற்படுத்தும் மிரட்டல்கள் என்பது கண்டறியப்பட்டது.வழக்கமாக, ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை துவங்கி, தொடர்ந்து பல நாட்களுக்கு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கம்.மிரட்டல் அந்த நேரங்களில் சோதனை மேற்கொள்ளும் போலீசார், அந்த சோதனைகள் வெறும் பீதியை ஏற்படுத்தும் மிரட்டல்கள் என்பதை அறிவிப்பர்.எனினும், எங்கிருந்து அந்த மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்பது இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த தகவல், ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, பள்ளிகளுடன் சேர்த்து, மூன்று வங்கிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.கன்னாட் பிளேசில் உள்ள ஆக்சிஸ் வங்கி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை மற்றும் ஸ்டேட் வங்கியின் கிழக்கு டில்லியின் ஷாதாரா கிளைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.தகவல் கிடைத்த உடன், அந்த வங்கிகளுக்கு வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த வளாகங்கள் சல்லடையாக அலசப்பட்டன. எனினும், அந்த இடங்களில் எந்த ஆட்சேபகரமான பொருட்களும் கண்டறியப்படவில்லை.சோதனை அது போல, டில்லி கன்டொன்மென்ட் பகுதியில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, சர்தார் படேல் வித்யாலயா, மிரா பப்ளிக் பள்ளி, சாணக்யபுரி, ராஜேந்திர நகரில் உள்ள ரம்ஜாஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ரம்ஜாஸ் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.அந்த பள்ளிகளில் சிலவற்றில் நேற்று காலையில், தேர்வுகள் நடக்கவிருந்தன. அந்த தேர்வுகள், சோதனைக்கு பின், ஒத்திவைக்கப்பட்டன.அந்த பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், பீதியை ஏற்படுத்தும் செயல்கள் என அறிவிக்கப்பட்டன. அதையடுத்து, மதியத்திற்கு பின், அந்த பள்ளிகள் மாமூலாக செயல்பட்டன.