உள்ளூர் செய்திகள்

9ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி: சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி: பள்ளி மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்புக்கு முன்பு இருந்தே பாலியல் கல்வியை வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தார். அவர் ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை செப்டம்பரில் விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அராதே அமர்வு சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது.அப்போது உத்தர பிரதேச அரசு, பள்ளிகளில் பாலியல் கல்வி எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.அதன்படி, அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், 'ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வழிகாட்டுதலின் அடிப்படையில், பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டிருந்தது.இதை கேட்ட நீதிபதிகள், 'பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் கல்வியின் நிலை போதுமானது அல்ல. குழந்தைகள் பருவமடையும் காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும்.'ஒன்பதாம் வகுப்புக்கு முன்பே, மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது எங்கள் கருத்து' என்று குறிப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்