டாக்டர்களுக்கு பரிசுகள்: மத்திய அரசு கடிவாளம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை தடுக்கும் நடவடிக்கையாக, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, ஒரே மாதிரியான சந்தைப்படுத்தல் நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.மருந்தியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மருத்துவ உபகரணங்கள் கூட்டமைப்பு, வெளிநாடுகளில் மருத்துவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்தக் கூடாது. மேலும், அவர்களுக்கு தங்கும் வசதி அல்லது தனிப்பட்ட பண பலன்களை வழங்கக் கூடாது.அனைத்து நிறுவனங்களும், மருத்துவ உபகரணங்கள் சந்தைப்படுத்தல் நடைமுறை தொடர்பான நெறிமுறை குழுவை அமைக்க வேண்டும்.அதனை தன் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்வதோடு, புகார் அளிப்பதற்கு உரிய வசதியை ஏற்படுத்த வேண்டும்.எந்தவொரு மருத்துவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது, அவர்களது முகவர்கள் சார்பில், பரிசுப்பொருளோ அல்லது தனிப்பட்ட பண பலன்களையோ அளிக்கக் கூடாது.நிறுவனங்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அல்லது நிறுவனங்கள் சார்பில், மருத்துவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, மாநாடு, பயிற்சிப் பட்டறை, கருத்தரங்கு ஆகியவற்றில் பங்கேற்க உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பை வழங்கக் கூடாது.மேலும், அவர்களுக்கு ஆடம்பர விடுதி, விலையுயர்ந்த உணவு போன்றவற்றை வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.