| ADDED : மார் 08, 2025 12:16 PM
புதுச்சேரி: சாலையில் தெருநாய்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, அவற்றுக்கு ஒளிரும் பட்டைகளை கட்டி விடுவது என்று பிராணிகள் நல வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.புதுச்சேரி மாநில பிராணிகள் நல வாரியத்தின் கூட்டம் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் தலைமை செயலகத்தில்நடந்தது. அரசு செயலர் நெடுஞ்செழியன், அதிகாரிகள், வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர், மாநில பிராணிகள் நல வாரியத்தின் குறிக்கோள்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கினார்.கூட்டத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களின் நகராட்சி மற்றும் கொம்யூன்களில் நிதி ஆதாரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரமான இறைச்சி வழங்கவும், தெருவோர இறைச்சி கடைகளை நெறிமுறைப்படுத்தவும், நவீன இறைச்சி கூடம் கட்டுவதற்கும், செல்லப் பிராணிகள் விற்பனை கடைகளுக்கு, செல்லப் பிராணிகள் விதிகள் பதிவு செய்து உரிமம் பெறவும் உள்ளாட்சி துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.தெருநாய்களுக்கு கருத்தடை, வெறி நோய் தடுப்பூசி போட வேண்டும். வீதிகளில் திரியும் மாடுகளுக்கு தொழுவம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து நிதி கோர பரிந்துரைக்கப்பட்டது.பிராணிகளை வதை, கொடுமை செய்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவும், தடுக்கவும், கால்நடை போக்குவரத்தை ஒழுங்குமுறை படுத்தவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.இரவு நேரங்களில் சாலைகளில் நாய்களால் ஏற்படும் விபத்தை தடுக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நாய்களின் கழுத்துகளில் ஒளிரும் பட்டைகள், செல்லபிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.