| ADDED : பிப் 09, 2025 05:12 AM
மதுரை: தமிழக மின்வாரியத்தில் ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் வகையில் 39 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.மதுரையைச் சேர்ந்தவர் மோகன். மின் பிரச்னை காரணமாக மின்வாரியத்தை தொடர்பு கொண்டார். ஒப்பந்த ஊழியர்கள் அரைகுறையாக சரிசெய்ததால் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் 'ஷாக்' ஆனவர், ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்யும் அளவிற்கு மின்வாரியத்தில் ஆள்பற்றாக்குறையா என விசாரிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அனுப்பினார். சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அவருக்கு அனுப்பிய பதிலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகிர்மான அலுவலகங்களிலும் களப்பணியாளர்களாகப் பணி புரியும் கேங்மேன் பணியில் 626 பணியிடங்களும், கள உதவியாளர் பணியில் 25 ஆயிரத்து 551 பணியிடங்களும், ஒயர்மேன் பணியில் 13 ஆயிரத்து 216 பணியிடங்கள் என மொத்தம் 39 ஆயிரத்து 393 பணியிடங்கள் காலியாக உள்ளன, என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நமது நிருபரிடம் மோகன் கூறியதாவது:
போதுமான அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டாலே மின் வாரியம் தொடர்பான பொது மக்கள் பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும். தவிர மின் வாரியத்திற்கு தொடர்பற்ற நபர்கள்மின் கம்பங்களில் ஏறி பழுது நீக்கி பொது மக்களிடம் பணம் பெறுவதும், உயிர் சேதங்களும், லஞ்சமும் தடுக்கப்படும். உடனடியாக தமிழக அரசு அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பி, மின் வாரிய ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க முன் வர வேண்டும் என்றார்.