சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல், வரும் 9ம் தேதி முதல் நடைபெறும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளது. இந்நிலையில், மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்போவதாக அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 10,175 விருப்ப மனுக்கள் வந்துள்ளன. அவர்களுக்கான நேர்காணல் வரும் 9 முதல் 13ம் தேதி வரை, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.வரும் 9ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல்; 10ம் தேதி கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.இதையடுத்து, 11ம் தேதி விருதுநகர், கடலுார், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி; 12ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்; 13ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி, கேரளத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடக்கும். இவ்வாறு பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் நேற்று கூட்டம் நடந்தது. இந்நிலையில், அந்த குழுவினர், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக, வரும் 7ம் தேதி முதல், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 'அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, சிறந்த தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, 'அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு' வரும் 7 முதல் 20ம் தேதி வரை, மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, வரும் 7ம் தேதி வேலுார், சேலம்; 8ம் தேதி விழுப்புரம், திருச்சி; 9ம் தேதி தஞ்சை, சிவகங்கை; 11ம் தேதி மதுரை, நெல்லை; 19ம் தேதி கோவை; 20ம் தேதி சென்னை ஆகிய மண்டலங்களில், அக்குழுவினர் பயணம் மேற்கொள்வர். அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், கருத்து கேட்பு கூட்டத்திற்கான, அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.