உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோதாவரியால் ஆந்திரா - தெலுங்கானா அக்கப்போர்

கோதாவரியால் ஆந்திரா - தெலுங்கானா அக்கப்போர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை நீடித்து வருவது போல, தற்போது ஆந்திரா - தெலுங்கானா இடையேயும் நதிநீர் பங்கீட்டில் மோதல் வெடித்துள்ளது. கோதாவரியின் குறுக்கே, பனக்சேரலா நீர்ப்பாசன திட்டத்துக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அணை கட்ட முயற்சிப்பது தான், இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட காரணம். தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் தெலுங்கானாவின் பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி, 'மாநில மக்கள் நலனில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை' என விமர்சித்து வருகிறது.

போர்க்கொடி

இதனால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆந்திராவிலும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமித்து வைத்து, வேளாண் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்காக, 81,900 கோடி ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. பனக்சேரலா திட்டம் நிறைவேற்றப்பட்டால், புதிய அணை வாயிலாக கூடுதலாக 9.4 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். 80 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். 400 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என, பலன்களை அடுக்கடுக்காக முன்வைத்து வருகிறது ஆந்திர அரசு. ஆனால், ஆளுங்கட்சி இந்த திட்டத்தை பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் ஊழலை அரங்கேற்ற பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. மாநில பிரிவினைக்குப் பின் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் ஆந்திர அரசு, முக்கிய திட்டங்களுக்காக மத்திய அரசையே நம்பி இருக்கிறது. அந்த வகையில், பனக்சேரலா திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் திரட்ட முடிவெடுத்திருக்கிறது. அதே நேரம், எதிர்க்கட்சிகள் திடீரென எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டு சந்திரபாபு நாயுடு அரசை அதிரவைத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை சந்திரபாபு நாயுடு சமாளித்து விடுவார் என்றாலும், அவர் பெரிதும் நம்பி இருக்கும் மத்திய அரசிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காதது தான், அணை கட்டுவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் தனக்கு பெரிதும் ஆதரவாக இருப்பார் என, சந்திரபாபு நாயுடு எதிர்பார்த்திருந்த மத்திய நீர்வளத் துறையின் முன்னாள் ஆலோசகரான ஸ்ரீராமிடம் இருந்து தான் வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விதிமீறல்

கோதாவரி படுகையில் வெள்ளம் ஏற்பட்டு, இதுவரை நீர் பாய்ந்தோடவில்லை என அடித்து கூறும் ஸ்ரீராம், மத்திய நீர்வள ஆணையமும் வெள்ள நீரை இதுவரை கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை என்கிறார். அப்படி இருக்கும்போது, வெள்ள நீரை அடிப்படையாக வைத்து மிகப் பெரிய நீர்த்தேக்கத்தை கட்டுவது சட்டப்படி சரியாக இருக்காது என்ற கருத்தையும் முன்வைத்திருக்கிறார் ஸ்ரீராம். மஹாராஷ்டிராவில் உருவாகும் கோதாவரி, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா உட்பட 7 மாநிலங்கள் வழியாக பாய்ந்து, கடைசியில் வங்கக் கடலில் கலக்கிறது. அதனால், கோதாவரியை ஆந்திரா மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. பிரிவினைக்குப் பின் கோதாவரி நதியில் இருந்து ஆந்திரா 532 டி.எம்.சி., நீரையும், தெலுங்கானா 968 டி.எம்.சி., நீரையும் பங்கீட்டுக்கொள்ள வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், 532 டி.எம்.சி., நீருக்கு மேல் ஆந்திரா பயன்படுத்தினால், அது தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது போல் ஆகும் என்கிறார் ஸ்ரீராம். தெலுங்கானா அரசும், கோதாவரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி அணை கட்டுவது என்பது அப்பட்டமான விதிமீறல் என கூறி, மத்திய நீர்வளத் துறையிடம் வலுவாக ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் தங்களுக்கான நீர் பங்கீட்டை முறையாக பயன்படுத்தினால், ஒரு துளி நீர் கூட கடலில் கலக்காது என மத்திய நீர்வள ஆணையமும், ஆந்திராவின் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறது.

நடவடிக்கை

ஆண்டுக்கு 90 முதல் 120 நாட்கள் மட்டுமே வெள்ளம் பாயும் சூழலில், உபரி நீர் எப்படி கடலில் கலக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. இதனால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற முடிவுக்கு ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் வந்திருக்கின்றன. எனினும், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநில உரிமையை தன் முன்னாள் குரு சந்திரபாபு நாயுடுவிடம் அடகு வைத்து விட்டார் என, பி.ஆர்.எஸ்., சாடியுள்ளது. தவிர, இந்த விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால், தெலுங்கானா நலனுக்காக மற்றொரு போராட்டத்தை கையில் எடுக்க நேரிடும் என்றும், அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரகசியமாக அளித்து வரும் ஆதரவையும் அம்பலப்படுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது. தெலுங்கானாவில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோதாவரி நீர் பிரச்னை பூதாகாரமாகி இருப்பது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. --- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜூலை 20, 2025 09:25

இன்னும் ராயல சீமாவை பிரிக்கச் சொல்லலியேடா... விவேக் ஞாபகம் வர்ராரு


அப்பாவி
ஜூலை 20, 2025 09:23

ஆமாண்டா... அப்போ அடிச்சுக்குட்டுப்பிரிஞ்ச போது எங்கே போச்சு புத்தி? தனித்தனியா ஆட்டையப் போடலாம்னு தானே பிரிஞ்சீங்க? ஒரு ரெண்டு வருஷம் மழை பெய்யாமப் போகட்டும் நாறிடும் தெலங்கானா.


RAAJ68
ஜூலை 20, 2025 08:45

மீண்டும் ஆந்திரா தெலுங்கானாவை ஒன்றாக இணைப்பதே இந்த பிரச்சனையின் தீர்வு. ஒரே மொழி ஒரே கலாச்சாரம் அப்படி இருக்கையில் எதற்கு இரண்டு மாநிலங்கள். சந்திரசேகர ராவ் தன்னுடைய சுயநலத்துக்காக தெலுங்கானாவை பிரிக்க போராடி வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடிப்பதற்கு மட்டுமே பயன்பட்டது ‌


RAAJ68
ஜூலை 20, 2025 08:43

கோதாவரி குண்டாரு காவேரி இணைப்பு என்ன ஆயிற்று.