ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவரை, அ.தி.மு.க.,விற்கான வியூக வகுப்பாளராக அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அமர்த்தி உள்ளார்.ஆந்திராவில், ஜன சேனா கட்சி துவங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தொடர்ந்து 10 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டார். ஆனால், தோல்வியே மிஞ்சியது. கடந்த 2024 சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். ஜன சேனா போட்டியிட்ட 21 சட்டசபை தொகுதிகள், இரண்டு லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில், 70,279 ஓட்டுகள் வித்தியாசத்தில் பவன் கல்யாண் வெற்றி பெற்றார். ஆந்திராவின் துணை முதல்வராகவும் ஆகி உள்ளார். அவருடைய தனித்து போட்டியிடும் முடிவுக்கு தடை போட்டது, கட்சிக்காக நியமிக்கப்பட்ட வியூக வகுப்பாளர் தான். அவர் என்ன சொல்கிறாரோ, அதை ஏற்று செயல்பட்டதாலேயே, ஆந்திராவில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதாக, பவன் கல்யாண் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். பவன் கல்யாண், துணை முதல்வர் ஆன பின்பும், அவருடைய செயல்பாடுகளை வியூக வகுப்பாளரே தீர்மானிக்கிறார். அரசியல் ரீதியிலான மற்ற முடிவுகள் எடுப்பதையும், அந்த வியூக வகுப்பாளரே செய்து தருகிறார். சமீபத்தில், தமிழகத்தில் இரு முக்கிய நிகழ்ச்சிகளில், பவன் கல்யாண் கலந்து கொண்டார். அதில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' கருத்தரங்கும் ஒன்று. அதில், பவன் கல்யாண் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இந்த பேச்சின் பின்னணியில், அவரது வியூக வகுப்பாளர் அறிவுரையே இருக்கிறது என்பதை அறிந்த அ.தி.மு.க., தரப்பு, தங்களுக்காக தமிழகம் வந்து செயல்படுமாறு அவரை அணுகியது. அவரும் ஒப்புக்கொண்டு, தன் டீம் வாயிலாக அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறார். அவர் வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையிலேயே, தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே, 'பஸ் யாத்ரா' சுற்றுப் பயணத்தை பழனிசாமி துவங்கி, மக்களை சந்தித்து வருகிறார். - நமது நிருபர் -