சென்னை: 'பா.ஜ.,வினருக்காக வாரந்தோறும் நடக்கும், 'ஷாகா'வில், கட்சி நிர்வாகிகள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்' என, அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், 'ஷாகா' எனப்படும் ஒரு மணிநேர பயிற்சியில் தினந்தோறும் பங்கேற்பர். 'ஷாகா'க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., அல்லாத பா.ஜ., - ஹிந்து முன்னணி, - வி.எச்.பி., - ஏ.பி.வி.பி., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளில், மாவட்ட அளவில் அல்லது வாய்ப்புள்ள இடங்களில், வியாழன் அல்லது வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக 'ஷாகா' நடத்தப்படுகிறது. சென்னையில் தி.நகர், சேத்துப்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில், இந்த வாராந்திர 'ஷாகா' நடக்கிறது. தி.நகரில் வியாழன்தோறும் நடக்கும் ஷாகாவில், பா.ஜ., மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். அமைப்பு பொதுச்செயலர், மாநிலத் தலைவர் போன்ற பொறுப்புகளில் இருந்த இல.கணேசன், கவர்னராகும் முன்பு வரை, தி.நகர் ஷாகாவில் தவறாமல் பங்கேற்பார்.வாரந்தோறும் 50க்கும் அதிகமான கட்சி நிர்வாகிகளுடன், விளையாட்டு, கலந்துரையாடல், யோகா என, 'ஷாகா' நிகழ்ச்சி களைகட்டும். பா.ஜ.,வில் புதிதாக இணையும் நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை புரிந்து, அதன் செயல்பாடுகளை அறிந்து, கொள்கைப்பிடிப்பு ஏற்படுத்துவதற்காகவே வாராந்திர 'ஷாகா' நடத்தப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக, பா.ஜ., நிர்வாகிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த ஓராண்டாக, 10க்கும் குறைவான நிர்வாகிகளே பங்கேற்பதாக கூறப்படுகிறது. இதனால், 'சங்பரிவார் அமைப்புகளுக்கான வாராந்திர 'ஷாகா'வில், பா.ஜ., நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் 'ஷாகா'க்களையும் துவங்க வேண்டும் என, கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.