ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பா.ஜ., தயார்! மக்கள் ஆதரவை திரட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு
வக்பு சட்டத்திருத்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை பா.ஜ., கையில் எடுத்துள்ளது. இதன்படி, இம்மசோதா குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் இடைவிடாது நடத்தி, அதற்கான ஆதரவு தளத்தை வலுப்படுத்தும் வகையில், மக்கள் மத்தியில் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.,மேலிடம் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலும் சட்டசபை தேர்தல்களும் வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பதால், அரசுக்கு நிர்வாக ரீதியாக சிக்கல்கள் ஏற்படுவதால், நாடு முழுதும் ஒரே நேரத்தில் லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி காட்டி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j5gk0z8i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வாறு செய்தால், அரசுக்கு வீணாக நிதிச் செலவு ஏற்படுவது குறையும் என்றும் கூறி வருகிறார்.இதற்காகவே, கடந்த டிசம்பரில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான 129வது அரசில் அயமைப்பு சட்டத்திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா என, இரண்டு மசோதாக்கள் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. எதிர்ப்பு
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா உடனடியாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டு, அங்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இந்த குழுவில், பா.ஜ., உறுப்பினர்கள் தங்களது முழு ஆதரவை காட்டி வரும் அதே வேளையில், தே.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த மசோதாக்களின் அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது, சாத்தியமுள்ள மாநிலங்களுக்கும் சேர்த்து, வரும் 2029 லோக்சபா தேர்லுடன், அவற்றின் சட்டசபை தேர்தல்கள் நடத்திவிடலாம்; தவிர, 2030ல் நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை முழுவீச்சில் அமல்படுத்தி விடலாம் என, பா.ஜ., பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.இதற்காக, இந்த மசோதாக்களை எக்காரணம் கொண்டும் கிடப்பில் போட்டு விடாமல், இடைவிடாது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியின் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.இந்த நிலையில்தான், இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் தீவிரமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்று பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளையும், யோசனைகளையும் ஆராய்ந்து வரும் நிலையில், முதற்கட்டமாக பா.ஜ., மாநில நிர்வாகிகள் அனைவருக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கும் வகையிலான கூட்டங்கள் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பா.ஜ., நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டும் வருகின்றன. நடவடிக்கை
இந்த நடவடிக்கைகளை தீவிரமாக செய்வதற்காகவே, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.,தேசிய பொதுச்செயலர் சுனில் பன்சால் ஆகியோர் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கி, களத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிட்டு வருகின்றனர்.ஏற்கனவே பெரும் எதிர்ப்பு இருந்து வந்த நிலையிலும், பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டு, பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், மக்களுடன் ஆலோசித்தும் ஆறு மாதங்களுக்குள், வக்பு சட்ட திருத்த மசோதாவின் இறுதி அறிக்கை தயார் செய்து முடிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், அந்த அறிக்கை அளிக்கப்பட்டு, இந்த கூட்டத் தொடரிலேயே இரண்டு சபைகளிலும் வெற்றிகரமாக அந்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.அதே பாணியில், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவையும் விரைவில் பணிகளை முடித்து, பார்லிமென்டில் நிறைவேற்றிட மத்திய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாவின் இறுதி அறிக்கையை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வழங்குவதற்கும் தீவிர நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து, பா.ஜ., நிர்வாகிகளிடையே மத்திய விவசாய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது:ஒவ்வொரு மாநில பா.ஜ., வும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து, விரிவாக விளக்க வேண்டும். இந்த மசோதாவின் அவசியம் குறித்தும், மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும். வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கும்கூட, பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., நிர்வாகிகள் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தற்போது அதை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அதை போலவே, இந்த மசோதாவுக்கும், ஆதரவு தளத்தை உருவாக்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளிலும், அனைத்து மாநில நிர்வாகிகளும் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -