உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காதலில் சிக்கிய சி.இ.ஓ.,; வலைதளங்களில் மீம் அலை

காதலில் சிக்கிய சி.இ.ஓ.,; வலைதளங்களில் மீம் அலை

தீபாவளி விழாவில் பட்டாசு; இளம்பெண் உற்சாக ஆட்டம்

ஹரியானாவில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் தீபாவளி விழா நடந்தது. அதில், இளம்பெண் அன்ஷி மாலிக் உற்சாகத்துடன் நடனம் ஆடும் வீடியோ, வலைதளங்கள் எங்கும் ஆக்கிரமித்துள்ளது. ஹர்யான்வி மொழி பாடலுக்கு அவர் ஆடும் துள்ளல் நடனத்தை அங்கு கூடியிருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனர். பலர் வீடியோவும் எடுத்தனர். 'இந்த தீபாவளிக்கு நீங்களே ஒரு பட்டாசாக மாறும்போது' என்ற தலைப்பில், அன்ஷி மாலிக் வெளியிட்ட அந்த உற்சாக வீடியோவை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர்.

காதலில் சிக்கிய சி.இ.ஓ.,; வலைதளங்களில் 'மீம்' அலை

'என்விடியா' சி.இ.ஓ., ஜென்சன் ஹூவாங், சீன பெண் உளவாளியுடன் திருமணம் கடந்த உறவில் இருந்தது, உலகம் முழுதும் பரபரப்பு செய்தியானது. இப்போது, அதே நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொரு திருமணமான பெண்ணுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வலைதளங்களில் ஜென்சனை கேலி, கிண்டல் செய்து ஏராளமான, 'மீம்' படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இரு பெண்களுடன் ஜென்சன் நடனம் ஆடுவது போலவும், 'வேறு எந்த பெண்ணுடனும் தொடர்பு இல்லை' என்று மனைவியிடம் சத்தியம் செய்வது போலவும், வேலைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 'சாட்ஜிபிடி' பயன்படுத்துவது போலவும் ஏ.ஐ., வீடியோக்களை வெளியிட்டு வலைதள பிரியர்கள் கொண்டாடுகின்றனர்.

விளையும் பயிர் முளையில் தெரிந்தது

உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டிய வீட்டில் தீப்பற்றி எரிவதை பக்கத்து வீட்டுச்சிறுவன் பார்த்தான். உடனடியாக, பாதுகாவலர்கள், பக்கத்து வீட்டினருக்கு எச்சரிக்கை செய்தான். அதோடு நிற்காமல், தீயணைப்பானை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கே சென்று விட்டான் 16 வயதான அந்த சிறுவன். பக்கத்து வீட்டு பால்கனியில் இருந்து அந்த பிளாட்டுக்கே ஏறிச்சென்ற சிறுவன், கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டான். எரிந்த தீயை வெற்றிகரமாக அணைத்தும் விட்டான். தக்க நேரத்தில் தீயை அணைத்ததால், பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. பெரியவர்கள் எல்லாம் ஆளாளுக்கு யோசனை செய்து கொண்டிருந்தபோது, அந்த சிறுவன் தானாகவே செயல்பட்டு தீயை அணைத்து விட்டான் என்று பாராட்டுகின்றனர், குடியிருப்புவாசிகள்.

பணியில் முழு ஈடுபாடு; 'ஆகாசா' ஊழியருக்கு பாராட்டு

'ஆகாசா ஏர்' விமான நிறுவன ஊழியர், விமான பயணத்தின்போது அழும் குழந்தையை சமாதானப்படுத்திய வீடியோ வலைதளங்களில் பரவுகிறது. நிஷாந்த் என்ற அந்த ஊழியர், பயணியின் குழந்தையை கைகளில் ஏந்தி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்கிறார். அதையும் சிரித்துக் கொண்டே செய்கிறார். இதைக்கண்ட பயணி ஒருவர், நிஷாந்தை பாராட்டி வீடியோ பதிவிட்டுள்ளார். 'அவருக்கு என் பாராட்டுக்கள். குழந்தையுடன் அவரது உரையாடல் சிறப்பாக இருந்தது. இது வெறும் கடமையைச் செய்வது மட்டுமல்ல; செய்யும் பணியை முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது; அதையும் ரசித்துச் செய்வது. அவரது உற்சாகம், பொறுமை இயல்பான அணுகுமுறை ஆகியவை, மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவை, மனிதநேயத்தை வெளிப்படுத்தின என்று தெரிவித்துள்ளார்.

வேன் டிரைவர் ஆட்டம்; வலைதளங்களில் காட்டம்

ஹிமாச்சல் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற வேன் டிரைவர் ஒருவரின் செயல், வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாங்கான பகுதியில் வேன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இருக்கையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டிய டிரைவர், சாலையில் வாகனத்துடன் சேர்ந்து ஓடியபடியே டான்ஸ் ஆடுகிறார்; பயணிகளும் அவரை உற்சாகப்படுத்துகின்றனர். 'இப்படி செய்யலாமா' என்று கூறி, டிரைவரையும், அவருக்கு உற்சாகம் அளித்த சுற்றுலா பயணிகளையும் வலைதளவாசிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

அழையா விருந்தாளி; அதிர்ச்சியில் தம்பதி

கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது. இரவு நேரத்தில் தம்பதி வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென வீட்டுக்குள் சிறுத்தை வந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த தம்பதி, தட்டுத்தடுமாறி தப்பி வெளியே வந்து கதவை வெளிப்புறமாக தாழிட்டனர். எனினும் சிறுத்தையை பார்த்த அதிர்ச்சியில், அந்த பெண் மயங்கி விழுந்தார். வனத்துறையினர், 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் வருவது பற்றி வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தது, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mainapproach
நவ 13, 2026 14:42

உட்காந்து இருக்கும் பேய்களும் ஆட்டம் போடுதுக, அறிவு வேணாம். இதேபோலத்தான் கோவா மற்றும் பெரும்பாலான சுற்றுலா தளங்களில் வண்டிகளிலும் போட்களிலும் ஓட்டுனருடன் சேர்ந்து மக்களும் ஆட்டம் போடவேண்டியது, எதாவது விபத்து ஏற்பட்டால் அரசாங்கத்தையும் கடவுளையும் குற்றம் சொல்ல வேண்டியது.


சமீபத்திய செய்தி