உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு; கர்ப்பிணியர் எடை கூடுவது, இணை நோய் காரணம்

சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு; கர்ப்பிணியர் எடை கூடுவது, இணை நோய் காரணம்

தமிழகத்தில், சிசேரியன் பிரசவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த, 2021 - 22ம் ஆண்டில், 47.4 சதவீதமாக இருந்த, சிசேரியன் பிரசவங்கள், தற்போது, 51.2 சதவீதமாக அதிகரித்துள்ளன. பெண்களின் எடை அதிகரிப்பு மட்டுமல்ல, இணை நோய்களும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழக அரசு தரப்பில், பிரசவ நேரங்களில் தாய், சேய் இறப்பை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்ப்பிணியரின் அனைத்து செயல்பாடுகளும் பிக்மி பதிவுகள் வழியாக கண்காணிக்கப்படுகின்றன. மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை புள்ளி விபரங்களின் படி, அரசு, தனியார் மருத்துவமனைகளில், 2021-22ல், 9 லட்சத்து, 11,028 பிரசவங்கள் நடந்துள்ளன. அதில், 4 லட்சத்து, 32,435 பிரசவங்கள் சிசேரியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 - 25 மார்ச் வரை, 8 லட்சத்து, 1,611 பிரசவங்கள் மொத்தமாக நடந்ததில், 4 லட்சத்து, 10,765 பிரசவங்கள் சிசேரியனாக பதிவாகி உள்ளன. கருவில் உள்ள குழந்தையின் சீரற்ற இதயத்துடிப்பு, கருவிலுள்ள குழந்தை எடை அதிகரிப்பு, கர்ப்பிணியர் உடல் எடை அதிகரிப்பு. சர்க்கரை, தைராய்டு, ரத்த சோகை, ரத்த அழுத்தம், பிற இணை நோய்களால் கர்ப்பிணியர் பாதிக்கப்படுவது போன்றவையே, சிசேரியன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதுகுறித்து, மகப்பேறு மருத்துவர் லலிதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

பிரசவங்களில் சிசேரியன் அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்களின் உடல் பருமன் அதில் ஒரு வகை மட்டுமே. கர்ப்பம் தரித்ததில் இருந்து, பிரசவ காலம் வரை, 10 கிலோ உடல் எடை கூடலாம்; அதை மீறி அதிக எடை கூடுவதும் சிசேரியனாக காரணமாகலாம். கர்ப்ப காலத்தில் உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாரம்பரிய பழக்கம் என வருபவர்கள் எல்லாம், இனிப்பு பலகாரங்களை வாங்கி வந்து தருகின்றனர். இது, முற்றிலும் தவறான பழக்கம். இனிப்புகளை தவிர்த்து, சத்தான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.https://x.com/dinamalarweb/status/1952169857258262643மருத்துவர்கள் கூறியபடி, 'செக் அப்' செய்வதும், மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்வதும் அவசியமாகும். அதிக எடை துாக்குவது, அதிக சோர்வை ஏற்படுத்தும் வேலை தவிர்த்து, அனைத்து வேலைகளையும் செய்யலாம். நடைபயிற்சி செய்வதுடன், சரியான உணவு உட்கொண்டால், சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Annamalai Palaniappan
ஆக 05, 2025 03:22

மக்கள் இதில் மாட்டிக்கொண்டு விட்டனர் மாற்று வழியே இல்லை எப்படியும் மருத்துவமனைக்கு போய்த்தான் தீரவேண்டும் டாக்டர் ஐடி ரைட் வந்தால் சற்று தடுக்கலாம், அரசாங்கமும் அரசாங்க மருத்துவமனை டெலிவரிக்கு ஆண்டு வரியில் ஊக்கத்தொகை கொடுத்தால் சற்று பயம் வரும் மருத்துவர்களுக்கு தமிழனின் இல்லற அடிப்படையை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள் அதுவும் சில்லறை விற்பனை போன்று ஆக்கிவிட்டார்கள் வீதிக்கு வீதி மகப்பேரு மற்றும் கருத்தரிப்பு இவர்கள் வழிமுறை ஒழுக்க நெறி இதல்லாம் கடைபிடிக்கிறார்களா அல்லது மாத விற்பனை இலக்கை கடைபிடிக்கிறார்களா என்று சிந்தித்துப் பாருங்கள்.


ஆரூர் ரங்
ஆக 04, 2025 11:44

முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு பிரசவ நேரத்தில் குழந்தையை தானாக வெளியே தள்ளும் பலமில்லை. முக்கித் தள்ளும்மா என செவிலியர்கள் கெஞ்சி பலனிருப்பதில்லை. பிரசவ வலி துவங்கி மணிக்கணக்கில் காத்திருப்பது டாக்டர்களுக்கும் கஷ்டமாக இருக்கிறதோ என்னவோ?.


Padmasridharan
ஆக 04, 2025 05:49

காசு வரும் என்பதற்காக சில மருத்துவர்கள் சிசேரியன் பண்ணிக்கவும் சொல்றாங்க.. நார்மல் வலிய தாங்க முடியாதுன்னும் சில தாய்மார்கள் இதை பயன்படுத்திக்கிறாங்க சாமி .


புதிய வீடியோ