ஜில்லுனு குல்பி, குச்சி ஐஸ், ஜூஸ்! சுவைக்கும் முன்னே சுதாரிக்கணு ம்
கோவை: வெயில்காலம் துவங்கிவிட்டதால், குல்பி, குச்சி ஐஸ் வண்டிகள், மலிவு விலை ஜூஸ் கடைகளை நோக்கி, மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். வெயிலுக்காக இவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு, பின் வாந்தி, வயிற்றுபோக்கு என அவதிப்பட வேண்டாமென, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உணவுக்கடைகள் நடத்துவோர், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உரிமம் பெறுவது கட்டாயம். பொட்டலமாக்கப்பட்ட எந்த உணவுப்பொருளாக இருந்தாலும், அதன் அட்டையில், தயாரிக்கப்பட்ட நிறுவனம், கலந்துள்ள பொருட்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். சில்லறை விற்பனையாக இருந்தால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழை, மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டியிருக்க வேண்டும். காலாவதி தேதிக்கு பின் எந்த உணவுப்பொருளும் விற்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தள்ளுவண்டிகளில் குல்பி, குச்சி ஐஸ் விற்கும் பலரும், முறையாக கையுறை அணியாமல், 'பேக்கிங்' செய்யாமல் விற்கின்றனர். பல இடங்களில் குளிரூட்டப்பட்ட பாத்திரத்தில் நிரப்பி, மலிவு விலையில் ஜூஸ், சர்பத், மில்க் ஷேக், ரோஸ்மில்க் போன்ற குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. இவை தரமான பழங்களில் தயாரிக்கப்பட்டவையா, எந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்ற பின்புலம் தெரியாமல் குடித்து, உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாக வேண்டாம் என அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு டாக்டர் செந்தில்குமார் கூறுகிறார். ''சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஐஸ், ஜூஸ் ஆகியவை சாப்பிடும் போது, தொற்று நோய் கிருமிகளால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். டைபாய்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி, தொண்டை பகுதியில் தொற்று, சளி, இருமல் தொந்தரவுகள் ஏற்படலாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, காய்ச்சி, ஆற வைத்த நீரை உடன் கொண்டு செல்வது, இளநீர், மோர் குடிப்பது நல்லது,'' என்கிறார் அவர்.
'பால் சேர்த்த ஜூஸ் ஒருநாள்தான் ஆயுசு'
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, '' ஐஸ், ஜூஸ் விற்கும் கடைகளுக்கு, எப்படி சுகாதாரமான முறையில் தயாரிப்பது என்பது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளோம். குறிப்பாக இரவில் காலி ஐஸ் டப்பாவை திறந்து வைத்தல், ஆர்.ஓ., தண்ணீரில் ஐஸ்கட்டி தயாரித்தல், ப்ரீசரில் படிந்திருக்கும் ஐஸ்கட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், அழுகிய பழங்களை தவிர்த்தல், கையுறை அணிந்திருத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். பால் சேர்க்கப்பட்ட ஜூஸ் வகைகளை ஒருநாளைக்கு மேல் பயன்படுத்த கூடாது. சுகாதாரமற்ற முறையில் விற்பது தெரிந்தால், 94440 42322 என்ற எண்ணிலோ, gmail.comஎன்ற இ-மெயில் முகவரியிலோ புகார் அளிக்கலாம்,'' என்றார்.