சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில், டெண்டர் கமிஷன், அதிகாரிகள் மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் மெகா ஊழல் நடந்திருப்பதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.இத்துறை அமைச்சர் நேருவின் சகோதரர்கள் மற்றும் மகன் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறையினர், 7ம் தேதி முதல் மூன்று நாட்கள் சோதனை நடத்தினர். குறிப்பாக, திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேரு வீடு, அதே பகுதியில் உள்ள அவரது சகோதரரான மறைந்த ராமஜெயம் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.கோவை ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலையில் உள்ள நேரு சகோதரர் மணிவண்ணன் வீடு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள மற்றொரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீடு மற்றும் 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' நிறுவனம் உள்ளிட்ட, 15 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மேலும், நேரு தம்பி ரவிச்சந்திரன், அவர்களது நிறுவனம் சார்ந்த இயக்குனர்கள் மற்றும் உதவியாளர்களிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில், 15 இடங்களில், 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' மற்றும் அந்நிறுவனம் சார்ந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம், 'ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா' நிறுவனம், 30 கோடி ரூபாய் கடன் பெற்று முறைடோக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை செய்தது.இந்நிறுவனம், 100.8 மெகாவாட் காற்றாலை மின் நிலையம் அமைக்க கடனாக, 30 கோடி ரூபாயை வாங்கியது. ஆனால், காற்றாலை மின் உற்பத்திக்கான எவ்வித அனுபவமும் அந்நிறுவனத்துக்கு இல்லை. கடன் பெற போலி ஆவணங்கள் உருவாக்கி, திசை திருப்பி பணம் பெறப்பட்டுள்ளது.இந்நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட கடன் தொகை, 'ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், டி.வி.எச். எனர்ஜி ரீசோர்சஸ்' ஆகிய நிறுவனங்களின் கடன்களை அடைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது; இது சட்டவிரோதமானது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும், எந்த முயற்சியும் எடுக்கவில்லை.சோதனையில், 'டிஜிட்டல்' பதிவுகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன. எனவே, பணப் பரிமாற்றம் மற்றும் மோசடிகளில், நேரு தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேரு மகனும் எம்.பி.,யுமான அருண் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.விசாரணையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 'சிண்டிகேட்' அமைத்து ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக, 'டெண்டர்' நடவடிக்கையில், முன்கூட்டியே யாருக்கு தருவது என்பதை முடிவு செய்து, கமிஷன் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.இதில், இடைத்தரகர், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கூட்டு பங்கு அதிகம். இதற்கான ஆதரங்களும் கிடைத்துள்ளன. சட்ட விரோதமாக கிடைத்த பணம், ஹவாலா பரிமாற்றம் வாயிலாக, பல்வேறு மாநிலங்களுக்கு கைமாற்றப்பட்டு உள்ளது.இத்துறையில், அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதற்காக வசூலிக்கப்பட்ட லஞ்சம் பணம் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.இதில், சட்டவிரோதமாக கூடுதலாக சேர்க்கப்பட்ட சொத்து விபரங்கள், பணம் கொடுத்தவர்கள், பணம் வாங்கியவர்கள், பலன் அடைந்தவர்கள் உள்ளிட்டவர்களை கண்காணிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. முறைகேட்டால், அரசு கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேரு தம்பி 'அட்மிட்'
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில், அமைச்சர் நேரு தம்பி ரவிச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக, அமலாக்கத் துறை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அவர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேரு தம்பி 'அட்மிட்'
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில், அமைச்சர் நேரு தம்பி ரவிச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக, அமலாக்கத் துறை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அவர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.