மர முருங்கை சாகுபடி செய்தால் வருவாய் அள்ளலாம்! மானியம் வழங்குகிறது தோட்டக்கலைத்துறை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
உடுமலை : மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், மர முருங்கை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:மடத்துக்குளம் வட்டாரத்தில், பலவிதமான காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போதைய சூழலுக்கு ஏற்ப, தினமும் வருவாய், வாரம்தோறும், மாதம்தோறும், ஆண்டு தோறும் வருமானம் வரும் வகையில், தோட்டக்கலைப்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.தோட்டக்கலைத்துறை வாயிலாக, காய்கறி பயிர்கள் சாகுபடிக்கு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், நடப்பாண்டில் மர முருங்கை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படுகிறது.முருங்கையில் செடி முருங்கை, மர முருங்கை என இரு வகை சாகுபடி உள்ளது. செடி முருங்கை என்பது, விதை வாயிலாக இனப்பெருக்கம் செய்யப்படுவதாகவும், குறுகிய காலம், அதாவது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பலன் தரும்.அதன் பின் காய்க்கும் திறன் குறைவதால், அதை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு, வேறு பயிர்கள் நடவு செய்யப்படுகிறது.மர முருங்கை என்பது, பல ஆண்டுகள் பயன்தருவதாகும்; குச்சிகள் வாயிலாக இனப்பெருக்கம் செய்து கொள்ளலாம். சுமார் 1.5 அடி சுற்றளவும், 40 அடி உயரமும் வளரக்கூடிய மர வகையாகும்.நல்ல காய்ப்புத்திறனுள்ள தாய் மரங்களை தேர்வு செய்து, பச்சை நிறம் மாறிய கிளைகளில், 10 செ.மீ., பருமனுள்ள கிளைகளினை, கூர்மையான கத்தியை பயன்படுத்தி, மரத்தின் பட்டை சேதமாகாமலும், மரம் நொறுங்கி விடாமலும், 2 அல்லது, 3 அடி உயரம் உள்ள குச்சிகளை வெட்டி எடுக்க வேண்டும்.மரக்கிளையின் நுனிப்பகுதியில், பசுஞ்சாணத்தை உருட்டி வைக்க வேண்டும். வெயில் பட்டால், நுனியில் இருந்து குச்சிகள் கீழ்நோக்கி காய்க்கத்துவங்கும்.மர முருங்கைக்கு, 6க்கு, 6 மீட்டர் இடைவெளியும், போதுமான காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் அவசியம். அத்துடன் நிலவளம், நீர் வளம், காற்றின் வேகம் இவற்றைப்பொறுத்தும் இடைவெளியை கூட்டி குறைக்க வேண்டும்.முருங்கைக்காய், முருங்கைக்கீரைக்கு என சிறந்த விற்பனை வாய்ப்பு பெருகியுள்ளது. மரத்துக்கு ஆண்டிற்கு மர முருங்கையில் சராசரியாக 100 கிலோ காய் கிடைக்கும்.மர முருங்கை சாகுபடிக்கு மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பாப்பான்குளம், கொழுமம் கிராமத்தில், மர முருங்கை புதிதாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 3.75 ஹெக்டேர் பரப்பளவிற்கு, மானியம் வழங்கப்படுகிறது.ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு, ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள அரசு தோட்டக்கலைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான பல ஆண்டு வளரக்கூடிய முருங்கை பதியன்கள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.மர முருங்கை புதிதாக சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கிக்கணக்கு நகல், 2 பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; பூவிகா தேவி 80720 09226; பபிதா 85250 25540 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர்சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.