உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலை திட்டம்: அரசு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் ஆணையம்

திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலை திட்டம்: அரசு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் ஆணையம்

சென்னை: திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலை விரிவாக்க திட்டத்திற்கு, தமிழக அரசின் ஒத்துழைப்பை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எதிர்பார்க்கிறது.தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில், திண்டுக்கல் - கொல்லம் இடையே, 295 கி.மீ., மாநில நெடுஞ்சாலை இருந்தது. அந்தந்த மாநில நெடுஞ்சாலைத் துறைகள் வாயிலாக, அவரவர் எல்லை வரை, இந்த சாலைகள் அரைகுறையாக பராமரிக்கப்பட்டு வந்தன.இந்த சாலையை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

விபத்து அதிகரிப்பு

கடந்த 2010ல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, இரண்டு வழிச்சாலையாக இது தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 10 அடி அகலத்தில் உள்ள இச்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை காலங்களில், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இந்த சாலையில், திண்டுக்கல் - குமுளி வரை, 125 கி.மீ.,க்கு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 60 அடி அகல சாலையாக, இது விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட, மத்திய அரசு முன்வந்துள்ளது. தற்போது திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்வதற்கு குறைந்தபட்சம், இரண்டே முக்கால் மணி நேரம் தேவைப்படுகிறது. இச்சாலை விரிவாக்க பணிகள் முடிந்தால், ஒரு மணி நேரம் வரை, பயண நேரம் குறையும். சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக அங்கு சென்று வருவர். இச்சாலை விரிவாக்க பணிக்கு, இரு புறங்களிலும், தலா 25 அடிக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் விவசாய நிலங்கள் அதிகளவில் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பு பணிக்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், இச்சாலைக்கு அடுத்த ஆறு மாதங்களில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விடும். அதன்பின், சாலை பணிக்கு எவ்வளவு நிதி தேவைப்படும்; எவ்வளவு நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கும் என்ற முழு விபரங்கள் தெரியவரும்.

நிலம் தேவை

தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால், திட்ட மதிப்பீடு தயாரிப்பு மற்றும் சாலை விரிவாக்க பணிகள், குறித்த காலத்திற்குள் முடியும் வாய்ப்புள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணைய தமிழக பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: திண்டுக்கல் - குமுளி நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, நிதி ஆதாரம் ஒரு பிரச்னையே இல்லை. தேவையான நிதியை வழங்க, 2024ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. இந்த சாலை பணிக்கு, விவசாய பட்டா நிலங்கள் அதிகளவில் கையகப்படுத்த வேண்டிஉள்ளது. இந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு முழுமையாக தேவை. பிரச்னையின்றி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றால், வரும் டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரி மாதம், சாலை விரிவாக்க பணிகள் துவங்கும். அடுத்த 12 மாதங்களில் பணியை நிறைவு செய்து, சாலை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை திறப்பதற்கும், தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி ஏற்படும்!

தேனி மாவட்டத்தில், மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 85 மற்றும் திண்டுக்கல் - - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 185 என, இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. மதுரையில் இருந்து தேனி, போடி, தேவிகுளம், மூணாறு, மூவாற்றுப்புழா, கொச்சி வரை, தேசிய நெடுஞ்சாலை எண் 85 உள்ளது. தற்போது, இந்த சாலை மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக, தொண்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் முதல் குமுளி இடையிலான, இரண்டு வழிச்சாலை திண்டுக்கல்லில் துவங்கி, தேனி, கம்பம், குமுளி, வண்டிப் பெரியாறு, கோட்டயம், கொல்லம் வரை உள்ளது. இது நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்படுவதால், இரு மாநில போக்குவரத்து மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை