உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போதை ஒழிப்பு நடவடிக்கைக்காக மாவட்ட, தாலுகா அளவில் குழு?

போதை ஒழிப்பு நடவடிக்கைக்காக மாவட்ட, தாலுகா அளவில் குழு?

சென்னை: சென்னையில் குடிசை வாசிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லை' என்று கூறப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அட்வகேட் கமிஷனரை நியமித்தது.அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள், இந்த பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாக கூறப்பட்டது. இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கை போதுமானது அல்ல. திருப்திகரமான நடவடிக்கைகள் இல்லையென்றால், இந்த பிரச்னையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டியது வரும்' என, கூறியிருந்தது.வழக்கு, முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உள்ளதாகவும், கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரி, இந்த குழுவை கண்காணிப்பார் என்றும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.இதையடுத்து, மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட மற்றும் தாலுகா அளவில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வாய்ப்புள்ளதா என, முதல் அமர்வு கேள்வி எழுப்பியது. இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh sridharan
செப் 20, 2024 16:09

எதற்கு குழு எவ்வளவு கம்மியா சரக்கு சேல்ஸ் ஆகுது அப்படின்னு கண்டுபிடிக்க வா சேல்ஸ் கூட்ட வா


அஸ்வின்
செப் 20, 2024 10:47

ஒன்னும் நடக்காது எல்லாம் கண்துடைப்பு